திருக்குறள் - 1151     அதிகாரம்: 
| Adhikaram: pirivaatraamai

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.

குறள் 1151 - திருவள்ளுவர் - ThiruValluvar

"sellaamai untael enakkurai matrunhin" Thirukkural 1151 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால் எனக்குச் சொல், பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர்வாழ வல்லவர்க்குச் சொல்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


காதலர் போகாமையுண்டாயின் எனக்குக் கூறு பிரிந்தார் நீட்டியாது விரைந்து வருவாரென்று சொல்லுகின்ற வரவினைப் பின்புளராய் வாழ்வார்க்குக் கூறு. இது கடிதுவருவாரென்ற தோழிக்குத் தலைமகள் ஆற்றாமையாற் கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(பிரிந்து கடிதின் வருவல் என்ற தலைமகற்குத் தோழி சொல்லியது.) செல்லாமை உண்டேல் எனக்கு உரை - நீ எம்மைப் பிரியாமை உண்டாயின் அதனை எனக்குச் சொல்; மற்று நின் வல்வரவு வாழ்வார்க்கு உரை - அஃதொழியப் பிரிந்துபோய் விரைந்து வருதல் சொல்வையாயின் அதனை அப்பொழுது உயிர்வாழ்வார்க்குச் சொல். (தலைமகளை ஒழித்து 'எனக்கு' என்றாள், தான் அவள் என்னும் வேற்றுமை அன்மையின். அக்கால மெல்லாம் ஆற்றியிருந்து அவ்வரவு காணவல்லளல்லள்; பிரிந்தபொழுதே இறந்துபடும் என்பதாம். அழுங்குவித்தல்: பயன், இதனைத் தலைமகள் கூற்றாக்கி உரைப்பாரும் உளர்.)

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(பிரிந்து கடிதில் வருவேனென்ற தலைமகனுக்குத் தோழி சொல்லியது.) செல்லாமை உண்டேல் எனக்கு உரை-தலைவ! நீ எம்மைவிட்டுப் பிரியாமை யுண்டாயின் அதை மட்டும் சொல்; மற்றுநின் வல்வரவு வாழ்வார்க்கு உரை - இனி, நீ பிரிந்துபோய் விரைந்து வருதல் சொல்வாயாயின், அதை நீ வரும்வரை ஆற்றியிருந்து உயிர்வாழ்வார்க்குச் சொல். தலைமகள் நீ திரும்பி வரும்வரை ஆற்றியிருப்பவளல்லள், நீ பிரிந்த பொழுதே இறந்துவிடுவாள் என்பதாம். இதனாற் செலவழுங்குவித்தல் பயன். அஃதாவது தலைமகளை யாற்றுவித்து ஓரிரு நாள் கழித்துப் பிரியச்செய்தல். தலைமகளொடு தனக்குத் தான் அவள் என்னும் வேற்றுமையின்மையால் 'எனக்கு' என்றாள். இது இல்லறத்தில் முதன் முதல் நிகழ்ந்த பிரிவாதலால், தலைமகளின் மென்மை நோக்கி நேர்முகமாய்க் கூறானாயினன். இது தலைமகள் தோழிக்குக் கூறிய கூற்றாக வுரைப்பர் மணக்குடவ காலிங்க பரிதி பரிப் பெருமாளர். இது முன்ன விலக்கு.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


என்னைப் பிரிவதில்லை என்றால் என்னிடம் சொல். சீக்கிரம் வருவேன் என்பதை எல்லாம் நீ வரும்போது உயிரோடு இருப்பார்களே அவர்களிடம் சொல்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பிரிந்து செல்வதில்லையென்றால் அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் சொல். நீ போய்த்தான் தீர வேண்டுமென்றால் நீ திரும்பி வரும்போது யார் உயிரோடு இருப்பார்களோ அவர்களிடம் இப்போது விடைபெற்றுக் கொள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பிரியமாட்டாய் என்றால் எனக்குச் சொல் மற்றபடி நீ திரும்ப வரும்வரை வாழ்வார்க்குச் சொல்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


பிரிந்து செல்லாமை உண்டானால் எனக்குச் சொல்வாயாக; பிரிந்து போய் விரைந்து திரும்பி வருவது பற்றியானால், அது வரையிலும் வாழ்ந்திருப்பவருக்குச் சொல்வாயாக.

Thirukkural in English - English Couplet:


If you will say, 'I leave thee not,' then tell me so;
Of quick return tell those that can survive this woe.

ThirukKural English Meaning - Couplet -Translation:


If it is not departure, tell me; but if it is your speedy return, tell it to those who would be alive then.

ThiruKural Transliteration:


sellaamai uNtael enakkurai matrunhin
valvaravu vaazhvaark kurai.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore