Kural 422

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

sendra idaththaal selavitaa theedhoree-i
nandrinpaal uyppa thaRivu.

🌐 English Translation

English Couplet

Wisdom restrains, nor suffers mind to wander where it would;
From every evil calls it back, and guides in way of good.

Explanation

Not to permit the mind to go where it lists, to keep it from evil, and to employ it in good, this is wisdom.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.

2 மணக்குடவர்

உள்ளஞ் சென்ற விடத்தே உடம்பையுஞ் செல்லவிடாது, தீமையை நீக்கி நன்மைப் பகுதியிலே செலுத்துவது அறிவாவது. இது காம நுகர்ச்சியின்கண் பழியும் பாவமும் பொருட்கேடும் வாராமற் செலுத்துவது அறிவென்றது.

3 பரிமேலழகர்

சென்ற இடத்தால் செலவிடாது - மனத்தை அதுசென்ற புலத்தின்கண் செல்ல விடாது, தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு - அப்புலத்தின் நன்மை தீமைகளை ஆராய்ந்து தீயதனின் நீக்கி நல்லதன்கண் செலுத்துவது அறிவு. (வினைக்கு ஏற்ற செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் எனப் புலம் ஐந்தாயினும் ஒரு காலத்து ஒன்றின்கண் அல்லது செல்லாமையின், 'இடத்தால்' என்றார். 'விடாது' என்பது கடைக்குறைந்து நின்றது. குதிரையை நிலமறிந்து செலுத்தும் வாதுவன் போல வேறாக்கி மனத்தைப் புலமறிந்து செலுத்துவது அறிவு என்றார், அஃது உயிர்க்குணம் ஆகலான்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

சென்ற இடத்தால் செலவிடா- மனத்தை அது சென்றவிடமெல்லாஞ் செல்லவிடாது; தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு- தீயவழியை நீக்கி நல்ல வழியிற் செலுத்துவது அறிவாம். விடாது என்பது கடைக்குறைந்து நின்றது. செல்லுதல் என்னும் வினைக்கேற்ற செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. 'ஒரீஇ' இன்னிசையளபெடை, இங்கு மனத்தைக் குதிரைபோற் கருத வைத்தது குறிப்புருவகம்.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

மனத்தினை அது சென்ற வழியிலே போக விடாமல் தீமையிலிருந்து நீக்கி நல்லவையிடத்தே செலுத்துவது அறிவாகும்.

6 சாலமன் பாப்பையா

மனம் சென்ற வழியெல்லாம் அதைச் செல்ல விடாமல், தீமையை விட்டு விலக்கி, நல்ல வழியில் நடத்துவது அறிவு.

7 கலைஞர் மு.கருணாநிதி

மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.

8 சிவயோகி சிவக்குமார்

சென்ற இடத்திற்கு ஏற்ப மாறாமல் தீமைகளைக் களைந்து நன்மைகளை ஏற்பது அறிவு

More Kurals from அறிவுடைமை

அதிகாரம் 43: Kurals 421 - 430

Related Topics

Because you're reading about Wisdom & Intelligence

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature