திருக்குறள் - 112     அதிகாரம்: 
| Adhikaram: natuvu nilaimai

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.

குறள் 112 - திருவள்ளுவர் - ThiruValluvar

"seppam udaiyavan aakkanhj sidhai" Thirukkural 112 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நடுவு நிலைமை யுடையவனது செல்வம் தன்னளவிலுங் கேடின்றியே நின்று, தன் வழியுள்ளார்க்குங் கேடுவாராமற் காவலாதலையுடைத்து. நடுவுநிலைமையுடையார் செல்வம் அழியாதென்றவாறு.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


செப்பம் உடையவன் ஆக்கம் - நடுவு நிலைமையை உடையவனது செல்வம்; சிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து - பிறர் செல்வம் போல அழிவு இன்றி அவன் வழியிலுள்ளார்க்கும் வலியாதலை உடைத்து. (விகாரத்தால் தொக்க எச்ச உம்மையான் இறக்கும் துணையும் அவன்றனக்கும் ஏமாப்பு உடைத்து என்பது பெற்றாம். அறத்தோடு வருதலின், அன்னதாயிற்று. தான் இறந்தவழி எஞ்சி நிற்பதாகலின் 'எச்சம்' என்றார்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


செப்பம் உடையவன் ஆக்கம்-நடுவுநிலைமை யுடையவனது செல்வம்; சிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து-பிறர் செல்வம் போல் அழியாது அவன் வழியினர்க்கும் வலிமையாதலை யுடையது. வலிமை-பாதுகாப்பு. எச்சவும்மை தொக்கது. ஒருவனுக்குப் பின் எஞ்சி நிற்பதாகலின் வழிமரபு எச்சமெனப்பட்டது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


நடுவு நிலைமையுடையவனது செல்வமானது அழிவில்லாமல் அவன் வழியில் வருவோர்க்குப் பாதுகாப்பான உறுதியாதலை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


சிறப்பு பொருந்தியவன் செயல்கள் வீணாகாமல் வளரும் சந்ததிக்கும் தனிச்சிறப்பு உடையதாய் இருக்கும்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


செம்மை உடையவனின் பொருள் வளமையானது இடையிலே அழிந்து போகாமல், அவன் வழியினர்க்கும் உறுதியாக நன்மை தரும்.

Thirukkural in English - English Couplet:


The just man's wealth unwasting shall endure,
And to his race a lasting joy ensure.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The wealth of the man of rectitude will not perish, but will bring happiness also to his posterity.

ThiruKural Transliteration:


seppam udaiyavan aakkanhj sidhaivindri
echchaththiR kaemaappu udaiththu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore