"seridhodi seydhirandha kallam urudhuyar" Thirukkural 1275 - Meaning in English & Tamil Vilakkam
- மு.வரதராசனார் உரை: Kural Vilakkam
- மணக்குடவர் உரை: Kural Vilakkam
- பரிமேலழகர் உரை: Kural Vilakkam
- ஞா.தேவநேயப் பாவாணர் உரை: Kural Vilakkam
- சாலமன் பாப்பையா உரை: Kural Vilakkam
- கலைஞர் மு.கருணாநிதி உரை: Kural Vilakkam
- சிவயோகி சிவக்குமார் உரை: Kural Vilakkam
- புலியூர்க் கேசிகன் Kural Vilakkam
- Thirukkural in English - English Couplet
மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil
காதலி என்னை நோக்கி செய்து விட்டுச் சென்ற கள்ளமான குறிப்பு, என் மிக்க துயரத்தைத் தீர்க்கும் மருந்து ஒன்று உடையதாக இருக்கின்றது.
மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil
செறிந்தவளையினை யுடையாள் செய்து அகன்ற களவு நீ உற்றதொரு துன்பத்தைத் தீர்ப்பதொரு மருந்தாதலை உடைத்து. தோழி மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தவழி, கேளாரைப்போலத் தலைமகள் அகன்ற செவ்வியுள் எதிர்ப்பட்ட தலைமகற்கு நின்குறை முடியும்; நீ இவ்விடைச்செல் லென்று தோழி கூறியது.
பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil
(இதுவும் அது.) செறி தொடி செய்து இறந்த கள்ளம் - நெருங்கிய வளைகளையுடையாள் என்கண் இல்லாததொன்றனை உட்கொண்டு அது காரணமாக என்னை மறைத்துப் போன குறிப்பு; உறுதுயர் தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து - என் மிக்க துயரைத் தீர்க்கும் மருந்தாவதொன்றனை உடைத்து. (உட்கொண்டது - பிரிவு. கள்ளம் - ஆகுபெயர். மறைத்தற் குறிபபுத் தானும் உடன்போக்கு உட்கொண்டது. உறுதுயர் - நன்று செய்யத் தீங்கு விளைதலானும் அதுதான் தீர்திறம் பெறாமையானும் உளதாயது. மருந்து - அப்பிரிவின்மை தோழியால் தெளிவித்தல். 'நீ அது செய்தல் வேண்டும்' என்பதாம்.).
ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil
(இதுவுமது) செறிதொடி செய்து இறந்த கள்ளம்-நெருங்கிய வளையல்களை யணிந்த என் காதலி , என்னிடத்தில்லாத தொன்றைக் கருதிக் கொண்டு அது கரணியமாக எனக்குமறைத்து வைத்த குறிப்பு ; உறு துயர் தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து- என் பெருந்துயரைத் தீர்க்கும் மருந்தாவ தொன்றை உடையதாயிருக்கின்றது. இல்லாததொன்று பிரிவு . ' கள்ளம் ' ஆகுபெயர் . மறைத்து வைத்தது உடன்போக் குட்கொண்டது . ' உறுதுயர் ' பெருமகிழ் வுறுத்தற்குச் செய்த பாராட்டு வினைகளை பிரிவுக்குறிப்பாகக் கொண்டு அஞ்சியதால் உண்டான மன வருத்தம் . 'உறு' உரிச்சொல் மருந்தாவது பிரிவின்மை தோழியால் தெரிவித்தல் . அதை உடனே செய்தல் வேண்டு மென்பதாம் . ' செறி தொடி ' அன்மொழித் தொகை .
சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil
நெருங்கி வளையல்களை அணிந்த என் மனைவி நான் மட்டுமே அறிய மறைத்துக் காட்டும் ஒரு குறிப்பில் என் பெருங்கவலையைத் தீர்க்கும் மருந்து ஒன்றும் உண்டு.
கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil
வண்ணமிகு வளையல்கள் அணிந்த என் வடிவழகியின் குறும்புத்தனமான பார்வையில், என்னைத் துளைத்தெடுக்கும் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தும் இருக்கிறது.
சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil
செழுமையான வளையல்கள் அணிந்தவள் செய்த திறமையான கள்ளத்தனம் நான் உற்ற துன்பத்தை தீர்க்கும் மருத்தை வைத்திருக்கிறது.
புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil
செறிந்த தொடியுடையவளான என் காதலி செய்துவிட்டுப் போன கள்ளமான குறிப்பானது, என் மிக்க துயரத்தைத் தீர்க்கும் ஒரு மருந்தையும் உடையதாய் இருந்தது.
Thirukkural in English - English Couplet:
The secret wiles of her with thronging armlets decked,
Are medicines by which my raising grief is checked.
ThirukKural English Meaning - Couplet -Translation:
The well-meant departure of her whose bangles are tight-fitting contains a remedy that can cure my great sorrow.
ThiruKural Transliteration:
seridhodi seydhirandha kallam urudhuyar
theerkkum marundhondru udaiththu.