Kural 413

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

seviyuNaviR kaeLvi yudaiyaar aviyuNavin
aandraaroa toppar nilaththu.

🌐 English Translation

English Couplet

Who feed their ear with learned teachings rare,
Are like the happy gods oblations rich who share.

Explanation

Those who in this world enjoy instruction which is the food of the ear, are equal to the Gods, who enjoy the food of the sacrifices.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

கற்றவரின் செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார்.

2 மணக்குடவர்

செவிக்கு உணவு போன்ற கேள்வியை யுடையவர் நிலத்தின் கண்ணே யிருப்பினும் அவியை யுணவாக வுடைய தேவரோடு ஒப்பர்.

3 பரிமேலழகர்

செவி உணவின் கேள்வி உடையார் - செவியுணவாகிய கேள்வியினை உடையார், நிலத்து அவியுணவின் ஆன்றாரொடு ஒப்பர் - நிலத்தின்கண்ணர் ஆயினும் அவியுணவினையுடைய தேவரோடு ஒப்பர். (செவி உணவு : செவியான் உண்ணும் உணவு. அல்வழிக்கண் வந்த இன்சாரியையது னகரம் வலிந்து நின்றது. அவியாகிய உணவு - தேவர்க்கு வேள்வித் தீயில் கொடுப்பன. அறிவான் நிறைந்தமையான் 'ஆன்றார்', என்றும், துன்பம் அறியாமையான் தேவரொடு ஒப்பர் என்றும் கூறினார். இதனான் அதனை உடையாரது சிறப்புக் கூறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

செவிஉணவின் கேள்வி உடையார் -செவியுணவாகிய கேள்வியறிவினையுடையார்; நிலத்து அவிஉணவின் ஆன்றாரோடு ஒப்பர்-நிலவுலகில் வாழ்வாராயினும் அவியுணவினையுடைய விண்ணுலகத்தேவரை யொப்பர். செவியுணவின் கேள்வி என்பதிலுள்ள இன்சாரியை அல்வழிக்கண் வந்தது. தேவர் அறிவுடையர் என்னுங் கருத்தால் ஆன்றோர் என்னப் பெற்றார். கேள்வியறிவினையுடையார் துன்பமின்றியின்பமே நுகர்தலால் தேவருக்கொப்பாகக் கூறப்பட்டார்.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

செவி உணவாகிய கேள்வியினையுடையவர்கள், பூமியில் வாழ்பவர்களாக இருந்தாலும் அவி உணவினையுடைய தேவர்களோடு ஒப்பாவார்கள்.

6 சாலமன் பாப்பையா

செவி உணவாகிய கேள்வியைப் பெற்றிருப்பவர் இப்பூமியில் வாழ்பவரே என்றாலும், வேள்வித் தீயில் கொடுக்கப்படும் நெய் முதலிய உணவைப் பெறும் விண்ணுலகத் தேவர்க்குச் சமமாவர்.

7 கலைஞர் மு.கருணாநிதி

குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும் செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர்.

8 சிவயோகி சிவக்குமார்

கேட்கப்பட வேண்டியதை கேட்டு அறிந்தவர்கள் உலகில் சிறந்ததை சுவைப்பதில் மேலானவர்களுக்கு ஈடானவர்கள்

More Kurals from கேள்வி

அதிகாரம் 42: Kurals 411 - 420

Related Topics

Because you're reading about Active Listening

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature