செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானுங் கெடும்.
Transliteration
seydhakka alla seyakkedum seydhakka
seyyaamai yaanunG kedum.
🌐 English Translation
English Couplet
Tis ruin if man do an unbefitting thing;
Fit things to leave undone will equal ruin bring.
Explanation
He will perish who does not what is not fit to do; and he also will perish who does not do what it is fit to do.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.
2 மணக்குடவர்
செய்யத்தகாதனவற்றைச் செய்தலாலும் கெடும்; செய்யத் தகுவனவற்றைச் செய்யாமையாலும் கெடும். இது மேற்கூறாதனவெல்லாம் தொகுத்துக் கூறிற்று.
3 பரிமேலழகர்
செய்தக்க அல்ல செயக் கெடும் - அரசன் தன்வினைகளுள் செய்யத்தக்கன அல்லவற்றைச் செய்தால் கெடும், செய்தக்க செய்யாமையானும் கெடும் - இனி அதனானே அன்றிச் செய்யத்தக்கனவற்றைக் செய்யாமை தன்னானும் கெடும். (செய்யத்தக்கன அல்லாவாவன : பெரிய முயற்சியினவும், செய்தால் பயனில்லனவும், அது சிறிதாயினவும் ஐயமாயினவும், பின் துயர்விளைப்பனவும் என இவை. செய்யத்தக்கனவாவன: அவற்றின் மறுதலையாயின. இச்செய்தல் செய்யாமைகளான் அறிவு, ஆண்மை, பெருமை,என்னும் மூவகை ஆற்றலுள் பொருள், படை என இரு வகைத்தாகிய பெருமை சுருங்கிப் பகைவர்க்கு எளியனாம் ஆகலான், இரண்டும் கேட்டிற்கு ஏதுவாயின. இதனான் 'செய்வன செய்து, ஒழிவன ஒழிக' என இருவகையனவும் உடன் கூறப்பட்டன.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
செய்தக்க அல்ல செயக் கெடும் - அரசன் தன் வினைக்குச் செய்யத்தகாதன வற்றைச் செய்யின் கெடுவான் . செய்தக்க செய்யாமையானும் கெடும் - இனி , அதற்குச் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமை யானுங் கெடுவான் . செய்யத்தகாதன வாவன ; ஆகா வினையும் பயனில் வினையும் சிறுபயன் வினையும் தெளிவில் வினையும் துயர்தருவினையும் கெடுதல் வினையுமாம் . செய்யத்தக்கன இவற்றின் மறுதலையாம் . இவ்விருவகை வினைகளையும் முறையே செய்தல் செய்யாமையால் , அறிவு ஆண்மை படை அரண்பொருள் ஆகிய ஐவகை ஆற்றல்களுள் இறுதி மூன்றும் ஒடுங்கிப் பகைவர்க் கெளியனாவனாதலால் , இரண்டுங் கேட்டிற்கேதுவாம் . செய்யத்தக்க என்பது செய்தக்க எனக்குறைந்து நின்றது . இனி , "பெருஞ்செய் யாடவர்" (நெடுநல் . 171)என்பதிற்போலச் செய் என்பது செய்கை என்று பொருள் படும் தொழிற்பெயர் என்றுமாம் .
5 திருக்குறளார் வீ. முனிசாமி
தான் செய்யக் கூடாத செயல்களைச் செய்வதால் ஒருவன் கெட்டுவிடுவான். செய்ய வேண்டிய செயல்களைச் செய்யாதிருப்பதாலும் கெட்டுவிடுவான்.
6 சாலமன் பாப்பையா
செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும்.
7 கலைஞர் மு.கருணாநிதி
செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்.
8 சிவயோகி சிவக்குமார்
செய்யதகாதவற்றை செய்வதால் கெடுதல் உண்டாகும் செய்யவேண்டியதைச் செய்யாது இருப்பினும் கெடுதல் உண்டாகும்.
More Kurals from தெரிந்துசெயல்வகை
அதிகாரம் 47: Kurals 461 - 470