திருக்குறள் - 677     அதிகாரம்: 
| Adhikaram: vinaiseyalvakai

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்.

குறள் 677 - திருவள்ளுவர் - ThiruValluvar

"seyvinai seyvaan seyanmurai avvinai" Thirukkural 677 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


செயலைச் செய்கின்றவன் செய்ய வேண்டிய முறை, அச் செயலின் உண்மையான இயல்பை அறிந்தவனுடையக் கருத்தைத் தான் ஏற்றுக் கொள்ளவதாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


செய்யத்தகும் வினையைச் செய்யுமவன் செய்யும் முறைமையாவது அவ்வினையினது உளப்பாடு அறிவானது உள்ளத்தைக் கூட்டிக் கோடல்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


செய்வினை செய்வான் செயன் முறை - அவ்வாற்றால் செய்யப்படும் வினையைத் தொடங்கினான் செய்யும் முறைமையாவது; அவ்வினை உள் அறிவான் உள்ளம் கொளல்- அவனது உளப்பாட்டினை அறிவான் கருத்தினைத் தான் அறிதல். ('அவ்வாறு' என்றது, பொருள் முதலிய எண்ணலையும் முடிவு முதலிய தூக்கலையும். உள் அறிவான் - முன் செய்து போந்தவன். அவன் கருத்து: அவன் செய்து போந்த உபாயம். அதனையறியவே தானும் அதனால் செய்து பயன் எய்தும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஒப்பான் செய்யுந் திறம் கூறப்பட்டது.) .

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


செய்வினை செய்வான் செயன் முறை-மேற்கூறியவாறு செய்யப்பட வேண்டிய வினையைச் செய்யுமாறு மேற்கொண்டவன் செய்யவேண்டிய முறையாவது; அவ்வினை உள் அறிவான் உள்ளம் கொளல்-அவ்வினையை ஏற்கெனவே செய்து அதன் உள்மருமங்களை அறிந்தவனது கருத்தையறிந்து அதன்படி செய்தலாம். மேற் கூறியவாறென்றது பொருள் முதலிய ஐந்தையும் எண்ணுதலையும் முடிவு முதலிய மூன்றையும் ஆராய்தலையும். 'உள்' ஆகுபெயர். 'உள்ளம்' செயன்முறை பற்றிய கருத்து. அது பிறர்க்குத் தெரியாது அவனுள்ளத்திலிருத்தலால் உள்ளம் எனப்பட்டது. அது வினை வெற்றிக்குக் கையாள வேண்டிய வழிவகை. அதை அறியவே, தானும் அவ்வாறு செய்து வெற்றிபெறுவன் என்பதாம். இம்முக்குறளாலும் ஒத்தோன் வினைசெய்யுத் திறங் கூறப்பட்டது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


தொழில் செய்யத் தொடங்கியவன் தொழில் செய்யும் முறைமை எவ்வாறென்றால், அத்தொழிலினை முன்பு செய்தவனுடைய உளப்பாட்டினைத் தான் அறிந்து நடந்து கொள்ளுதலாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஒரு செயலைச் செய்யத் தொடங்குபவன் அதைச் செய்யும் முறையாவது, அச்செயலை இதற்கு முன்பு செய்திருப்பவனின் கருத்தை அறிந்து கொள்வதேயாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒரு செயலில் ஈ.டுபடுகிறவன், அச்செயல் குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


செய்யவேண்டிய செயல்களை செய்பவரின் செயல்பாடுகள் முறையாக இருப்பின், அச்செயல்களை உணர்பவரின் உள்ளம் கவரப்படும்.

Thirukkural in English - English Couplet:


Who would succeed must thus begin: first let him ask
The thoughts of them who thoroughly know the task.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The method of performance for one who has begun an act is to ascertain the mind of him who knows the secret thereof.

ThiruKural Transliteration:


seyvinai seyvaan seyanmuRai avvinai
uLLaRivaan uLLam koLal.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore