திருக்குறள் - 590     அதிகாரம்: 
| Adhikaram: otraatal

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை.

குறள் 590 - திருவள்ளுவர் - ThiruValluvar

"sirappariya otrin kan seyyarka seyyin" Thirukkural 590 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒற்றனிடத்தில் செய்யும் சிறப்பைப் பிறர் அறியுமாறு செய்யக்கூடாது, செய்தால் மறைபொருளைத்தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒற்றர்க்குச் சிறப்புச் செய்யுங்கால் பிறரறியாமற் செய்க: பிறரறியச் செய்வனாயின் அவர் ஒற்றிவந்த பொருளைப் புறத்துவிட்டானாம். இஃது ஒற்றர்க்குச் சிறப்புச் செய்யுங்கால் பிறரறியாமற் செய்ய வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒற்றின்கண் சிறப்பு அறியச் செய்யற்க - மறைந்தவை அறிந்து கூறிய ஒற்றின்கண் செய்யும் சிறப்பினை அரசன் பிறர் அறியச் செய்யாதொழிக; செய்யின் மறை புறப்படுத்தான் ஆகும் - செய்தானாயின் தன்னகத்து அடக்கப்படும் மறையைத் தானே புறத்திட்டான் ஆம். (மறையாவது அவன் ஒற்றனாயதூஉம் அவன் கூறியதூஉம் ஆம். சிறப்புப் பெற்ற இவன் யாவன் என்றும், இது பெறுதற்குக் காரணம் யாது என்றும் வினவுவாரும் இறுப்பாரும் அயலாராகலின், 'புறப்படுத்தானாகும்' என்றார். இவை மூன்று பாட்டானும் ஒற்றரை ஆளுமாறும், அவரான் நிகழ்ந்தன அறியுமாறும், அறிந்தால் சிறப்புச் செய்யுமாறும் கூறப்பட்டன.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒற்றின்கண் சிறப்பு அறியச் செய்யற்க - அறிதற்கரிய மறைபொருட்களை யறிந்து வந்து கூறிய ஒற்றனுக்குச் செய்யும் சிறப்பை , பிறரறியச் செய்யா தொழிக ; செய்யின் மறை புறப்படுத்தான் ஆகும்- செய்தானாயின் தன் உள்ளத்திற் போற்றிக் காக்கவேண்டிய மருமச் செய்திகளைத் தானே எல்லார்க்கும் வெளிப்படுத்தினவன்ஆவன். ஒற்றனுக்குப் பிறரறியச் சிறப்புச் செய்யின் ,இவன் யாரென்றும் அவன் சிறப்புப் பெறக் கரணியம் என்ன வென்றும் பிறரால் வினவப்படுதலின், 'புறப்படுத்தானாகும் மறை' என்றார். மறையாவது அவன் ஒற்றன் என்பதும்,அவன் ஒற்றியறிந்து கூறிய செய்தியுமாகும்.அம்மறை வெளிப்படின், பயனின்றிப் போவதுடன் அவ்வொற்றனையும் அதன்பின் ஆளமுடியாதாம். இதனால் ஒற்றனுக்குச் சிறப்புச் செய்யும் வகை கூறப்பட்டது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


மறைவாகச் செய்தவற்றை அறிந்து கூறிய ஒற்றனுக்குச் செய்யும் சிறப்பினைப் பிறர் அறியுமாறு செய்யாதிருக்க வேண்டும். அப்படிச் செய்வானானால், மறைத்து வைக்கப்பட வேண்டியதைத் தானே வெளிப்படுத்தி விட்டான் என்பதாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


மறைவாக நிகழ்வனவற்றைஅறிந்து சொல்லும் ஒற்றருக்குப் பரிசு தருக; மறைவாகவே தருக; ஊர் அறியத் தருவது மறைவையும் ஒற்றரையும் தானே வெளிப்படுத்தியது போல் ஆகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஓர் ஒற்றரின் திறனை வியந்து பிறர் அறியச் சிறப்புச் செய்தால், ஒளிவு மறைவாக இருக்கவேண்டிய செய்தியை, வெளிப்படுத்தியதாகிவிடும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


சிறப்பானது என்று கண்காணித்தலை பாராட்டுவது செய்யக்கூடாது. செய்தால் மறைப்பொருளை வெளிப்படுத்தியது போல் ஆகும்.

Thirukkural in English - English Couplet:


Reward not trusty spy in others' sight,
Or all the mystery will come to light.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Let not a king publicly confer on a spy any marks of his favour; if he does, he will divulge his own secret.

ThiruKural Transliteration:


siRappaRiya otrin-kaN seyyaRka seyyin
puRappatuththaan aakum maRai.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore