சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள்.
Transliteration
siRappeenum selvam peRinum piRarkkuinnaa
seyyaamai maasatraar koaL.
🌐 English Translation
English Couplet
சிறப்பு தரும் செல்வங்கள் பல பெற்றாலும் அடுத்தவருக்கு துன்பம் செய்யாதது அழுக்கு அற்றவர்களின் பண்பு.
Explanation
Though ill to neighbour wrought should glorious pride of wealth secure,
No ill to do is fixed decree of men in spirit pure.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.
2 மணக்குடவர்
மிகுதியைத் தருகின்ற செல்வத்தைப் பெறினும் பிறர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு. இது பழி வாராத செல்வம் பெறினும் தவிரவேண்டுமென்றது.
3 பரிமேலழகர்
[அஃதாவது, தனக்கு ஒரு பயன் நோக்கியாதல் ,செற்றம் பற்றியாதல். சோர்வானாதல் ஓர் உயிர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை. இன்னா செய்தல் வெகுளி ஒழியவும் நிகழும் என்பது அறிவித்தற்கு , இது வெகுளாமையின்பின் வைக்கப்பட்டது.) சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் - யோகமாகிய சிறப்புத்தரும் அணிமா முதலிய செல்வங்களைப் பிறர்க்கு இன்னா செய்து பெறலாமாயினும்; பிறர்க்கு இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள் - அதனைச் செய்யாமை ஆகமங்கள் கூறிய ஆற்றான் மனந்தூயாராது துணிவு. (உம்மை பெறாமைமேற்று. சிறப்பு உடையதனைச் சிறப்பு என்றும், அதன் பயிற்சியான் வாயுவை வென்று எய்தப்படுதலின் எட்டுச் சித்திகளையும் சிறப்பு ஈனும் செல்வம் என்றும், காமம் வெகுளி மயக்கம் என்னும் குற்றங்கள் அற்றமையான் 'மாசு அற்றார்' என்றும் கூறினார். இதனான் தமக்கொரு பயன் நோக்கிச் செய்தல் விலக்கப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
சிறப்பு ஈனும் செல்வம் பெறினும்- சிறப்பைத்தரும் பெருஞ்செல்வம் பிறரை வருத்திப்பெறக்கூடுமாயினும்; பிறர்க்கு இன்னா மாசு அற்றார் கோள் - அதைப் பெறுதற்குப் பிறர்க்குத் தீங்கு செய்யாமை குற்றமற்ற பெரியோர் கொள்கையாம். இதனாற் பெரும்பய னோக்கியும் இன்னா செய்தல் விலக்கப்பட்டது.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
பிறர்க்குத் துன்பம் செய்து தவமாகிய சிறப்புத் தரும் செல்வங்களைப் பெறலாம் என்றாலும், அதனைச் செய்யாதிருப்பதே மனம் மாசற்றவரது துணிவாகும்.
6 சாலமன் பாப்பையா
சிறப்பைத் தரும் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும்கூட அடுத்தவர்க்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.
7 கலைஞர் மு.கருணாநிதி
மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்.
8 சிவயோகி சிவக்குமார்
சிறப்பு தரும் செல்வங்கள் பல பெற்றாலும் அடுத்தவருக்கு துன்பம் செய்யாதது அழுக்கு அற்றவர்களின் பண்பு.
More Kurals from இன்னாசெய்யாமை
அதிகாரம் 32: Kurals 311 - 320
Related Topics
Because you're reading about Non-Violence