திருக்குறள் - 744     அதிகாரம்: 
| Adhikaram: aran

சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்.

குறள் 744 - திருவள்ளுவர் - ThiruValluvar

"sirukaappir paeridaththa thaaki urupagai" Thirukkural 744 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


காக்க வேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய், தன்னை எதிர்த்துவந்த பகைவரிருடைய ஊக்கத்தை அழிக்க வல்லது அரண் ஆகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


காக்கவேண்டும் இடம் சிறிதாய், மதிலகம் பெரிய இடத்தையுடைத்தாய், மதிலையுற்ற பகைவரது மிகுதியைக் கெடுப்பது அரணாவது. சிறு காவலாவது ஒருபக்கம் மலையாயினும் நீராயினும் உடைத்தாதல்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


சிறுகாப்பின் பேர் இடத்தது ஆகி - காக்க வேண்டும் இடம் சிறிதாய் அகன்ற இடத்தை உடைத்தாய்; உறு பகை ஊக்கம் அழிப்பது அரண் - தன்னை வந்து முற்றிய பகைவரது மன எழுச்சியைக் கெடுப்பதே அரணாவது. (வாயிலும் வழியும் ஒழிந்த இடங்கள் மலை, காடு, நீர்நிலை என்றிவற்றுள் ஏற்பன உடைத்தாதல் பற்றி 'சிறுகாப்பின்' என்றும்,அகத்தோர் நலிவின்றியிருத்தல் பற்றி, 'பேரிடத்தது ஆகி' என்றும், தன் வலி நோக்கி 'இது பொழுதே அழித்தும்' என்று வரும் பகைவர் வநது கண்டால், அவ்வூக்கமொழிதல் பற்றி, 'ஊக்கம் அழிப்பது' என்றும் கூறினார்.) .

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஞா. தேவநேயப் பாவாணர் சிறு காப்பின் பெரு இடத்தது ஆகி-காவல் செய்ய வேண்டிய இடம் சிறிதாய், வாழ்தற்கேற்ற உள்ளிடம் அகன்ற தாய்; உறுபகை ஊக்கம் அழிப்பது-தன்னை வந்து முற்றுகையிட்ட பகைவரின் மனவெழுச்சியைக் கெடுப்பதே; அரண்- சிறந்த கோட்டையரணாவது. நாற்புறத்து வாயில்கள் தவிர, மற்ற இடமெல்லாம் தகர்க்க முடியாத திண்ணிய மதிலாகவும் அணுகமுடியாத பொறிகளேற்றப் பட்டதாகவும் இருத்தலின், 'சிறுகாப்பின்' என்னும்: அரசனும் படையும் நகரமக்களும் ஏந்தாக (வசதியாக) வாழ்தற்கேற்ப அகன்றிருத்தல் பற்றிப் 'பேரிடத்ததாகி' என்னும்; தம் ஆற்றலும் ஊக்கமும் நோக்கி, இன்றே யழித்துவிடுவோம் என்னும் பூட்கை மறத்துடன் வந்த பகைவர், மதிலைக்கண்டவுடன் ஊக்கமழிதலின் 'ஊக்கம் அழிப்பது' என்றும்; கூறினார். பேரிடத்தைக் கோட்டையுள்ளிடம் என்று கொள்ளாது நாடுமுழுதுமென்று கொண்டு, 'வாயிலும் வழியு' மொழிந்த விடங்கள் மலை, காடு, நீர்நிலை யென்றிவற்றுள் ஏற்பனவுடைத்தாதல் பற்றிச் 'சிறுகாப்பின்' என்று கூறியதாக வுரைத்தார் பரிமேலழகர். முதலிரு குறள்கள் தவிரப் பிறவெல்லாம் மதிலரணைப் பற்றியே சிறப்பாகக் கூறுவதைக் கூர்ந்து நோக்கிக் காண்க. அகழி மதிலைச் சேர்ந்திருப்பதனால், அது மதிலொடு சேர்த்தே கருதப்பெறும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


காவல் செய்யவேண்டிய இடம் சிறியதாயும், கோட்டையின் சுற்றுப் பெரியதாயும், சண்டையிட வரும் பகைவர்க்கு மலைப்பைத் தருவதாயும் அமைவது அரண்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


உட்பகுதி பரந்த இடமாக அமைந்து, பாதுகாக்கப் படவேண்டிய பகுதி சிறிய இடமாக அமைந்து, கடும் பகையின் ஆற்றலை அழிக்கக் கூடியதே அரண் எனப்படும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


சிறுமை ஏற்படும் காலத்தில் பாதுகாக்கும் பெரிய இடமாகவும், பகை கொண்டவர்களின் ஊக்கத்தை அழிப்பதாகவும் இருப்பதே அரண்.

Thirukkural in English - English Couplet:


A fort must need but slight defence, yet ample be,
Defying all the foeman's energy.

ThirukKural English Meaning - Couplet -Translation:


A fort is that which has an extensive space within, but only small places to be guarded, and such as can destroy the courage of besieging foes.

ThiruKural Transliteration:


siRukaappiR paeridaththa thaaki uRupagai
ookkam azhippa tharaN.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore