சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின் வறுமை தருவதொன்று இல்.
Transliteration
siRumai palaseydhu seerazhikkum soodhin
vaRumai tharuvadhondru il.
🌐 English Translation
English Couplet
Gaming brings many woes, and ruins fair renown;
Nothing to want brings men so surely down.
Explanation
There is nothing else that brings (us) poverty like gambling which causes many a misery and destroys (one's) reputation.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைபோல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.
2 மணக்குடவர்
துன்பமாயின பலவற்றையுஞ் செய்து தலைமையை யழிக்கும் சூதுபோல வறுமையைத் தருவது பிறிதொன்று இல்லை.
3 பரிமேலழகர்
சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின் - தன்னை விழைந்தார்க்கு முன்இல்லாத துன்பங்கள் பலவற்றையும் விளைத்து உள்ள புகழையும் கெடுக்கும் சூதுபோல்; வறுமை தருவது ஒன்று இல் - நல்குரவினைக் கொடுக்க வல்லது பிறிதொன்று இல்லை. (அத்துன்பங்கள் முன்னர்க் கூறுப. நல்வினைகளையும் நல்லினத்தையும் நீக்கித் தீவினைகளையும் தீயினத்தையும்கூட்டுதலால், 'சீர் அழிக்கும்' என்றார். வறுமைக்கு எல்லையாவர் என்பதாம்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
பல சிறுமை செய்து சீர் அழிக்கும் சூதின் - பல்வேறு இழிவுதருந்துன்பங்களைச் செய்து, உள்ள பெருமையையுங் கெடுக்கும் சூதாட்டத்தைப்போல; வறுமை தருவது ஒன்றுஇல் - கொடிய வறுமையைத் தரக்கூடியது வேறொன்றுமில்லை. நளன்போல் மக்களைவிட்டுப் பிரிவதும்,காதல் மனைவியைக் காட்டில் விட்டு நீங்குவதும் ; பாண்டவர் போல் மனைவியையும் பணையமாக வைத்திழப்பதும்; பகைவர் அவள் கூந்தலைப்பிடித்து அம்பலத்திற்கு இழுத்து வந்து மானக்கேடாய்ப் பேசி துகிலுரியப் பார்த்திருப்பதும், வென்றவர்க்கு அடிமையராகி மேலாடையைக் களைவதும், பல்வகைச் சிறுமைகளாம். சூது ஐம்பெருங் குற்றங்களுள் ஒன்றாதலாலும், அதையாடுவோர் தீயோரொடு சேர்த்து எண்ணப்படுவதாலும், தோற்றவர் நாட்டையும் செல்வத்தையும் இழத்தலாலும், 'சீரழிக்கும்' என்றார்.
5 சாலமன் பாப்பையா
துன்பங்கள் பல தந்த,நம் புகழையும் அழிக்கும் சூதைப் போல் நமக்கு வறுமை தருவது வேறு ஒன்றும் இல்லை.
6 கலைஞர் மு.கருணாநிதி
பல துன்பங்களுக்கு ஆளாக்கி, புகழைப் கெடுத்த, வறுமையிலும் ஆழ்த்துவதற்குச் சூதாட்டத்தைப் போன்ற தீமையான செயல் வேறொன்றும் இல்லை.
7 சிவயோகி சிவக்குமார்
கேடு பல செய்து ஒழுங்குப்பட்ட வாழ்வை வறுமை தந்து அழிக்கும் சூதினைப் போல் வேறோன்று இல்லை.
8 புலியூர்க் கேசிகன்
தன்னை விரும்பியவருக்குப் பலவகைத் துன்பங்களையும் செய்து அவரிடமுள்ள புகழையும் கெடுக்கும் சூதைப் போல், வறுமையைத் தரக்கூடியது வேறு எதுவும் இல்லை.
More Kurals from சூது
அதிகாரம் 94: Kurals 931 - 940
Related Topics
Because you're reading about Gambling