சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
Transliteration
solluka sollaip piRidhoarsol achchollai
vellunjol inmai aRindhu.
🌐 English Translation
English Couplet
Speak out your speech, when once 'tis past dispute
That none can utter speech that shall your speech refute.
Explanation
Deliver your speech, after assuring yourself that no counter speech can defeat your own.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
7 scholars' interpretations
1 மு.வரதராசனார்
வேறோரு சொல் அந்தச் சொல்லை வெல்லும் சொல்லாக இல்லாதிருந்தால் அறிந்த பிறகே சொல்லக்கருதியதைச் சொல்லவேண்டும்.
2 மணக்குடவர்
சொல்லைச் சொல்லுக; தான் சொல்ல நினைத்த அச்சொல்லைப் பிறிதொரு சொல்லாய் வெல்லுஞ் சொல் இல்லை யாதலை யறிந்து.
3 பரிமேலழகர்
சொல்லைப் பிறிது ஓர்சொல் வெல்லும் சொல் இன்மை அறிந்து - தாம் சொல்லக்கருதிய சொல்லைப் பிறிதோர் சொல்லால் வெல்ல வல்லதொரு சொல் இல்லாமை அறிந்து; அச்சொல்லைச் சொல்லுக - பின் அச்சொல்லைச் சொல்லுக. (பிறிதோர் சொல் - மாற்றாரது மறுதலைச்சொல். வெல்லுதல் - குணங்களான் மிகுதல், அதுவே வெல்லச் சொல்லுக என்பதாம். இனிப் 'பிறிதோர் சொல்', 'வெல்லும் சொல்' எனச் செவ்வெண்ணாக்கி, ஒத்த சொல்லும் மிக்க சொல்லும் உளவாகாமல் சொல்லுக என்று உரைப்பாரும் உளர். இது சொற்பொருட் பின்வரும் நிலை.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
சொல்லைப் பிறிது ஓர் சொல் வெல்லும் சொல் இன்மை அறிந்து - தாம் சொல்லக் கருதிய சொல்லை வெல்லக்கூடிய வேறொரு சொல்லில்லாமை யறிந்து; அச்சொல்லைச் சொல்லுக - பின்பு அச்சொல்லைச் சொல்லுக. 'பிறிதோர் சொல்' பகைவரின் மறுப்புச்சொல். சொல் என்பது தனிச்சொல்லிற்கும் கூற்றிற்கும் பொதுவாம். வெல்லுதல் உண்மை யுணர்த்துவதிலும் ஏதுக்கள் கூடிய ஏரணவலிமையிலும் மிகுந்து எதிரிகள் கூற்றைப் பொருளற்ற தெனக்காட்டுதல். இதில் வந்துள்ளது சொற்பொருட் பின்வருநிலையணி. இனி , பிறிதோர் சொல்லும் வெல்லுஞ்சொல்லும் என இரண்டாகக் கொண்டு. "ஒத்தசொல்லும் மிக்க சொல்லு முளவாகாமற் சொல்லுக." என்றுரைப்பதுபொருந்தாதாம்.
5 சாலமன் பாப்பையா
தாம் சொல்லும் சொல்லை வெல்ல, வேறொரு சொல் இல்லை என்பதை அறிந்து சொல்லுக.
6 கலைஞர் மு.கருணாநிதி
இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என்று உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
7 சிவயோகி சிவக்குமார்
சொல்லப்படும் சொல்லுக்கு மேலான சொல் இல்லாதபடியும், வெல்ல முடியாதபடியும் ஆராய்ந்து சொல்லவேண்டும்.
More Kurals from சொல்வன்மை
அதிகாரம் 65: Kurals 641 - 650
Related Topics
Because you're reading about Eloquence