திருக்குறள் - 827     அதிகாரம்: 
| Adhikaram: kootaanatpu

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.

குறள் 827 - திருவள்ளுவர் - ThiruValluvar

"solvanakkam onnaarkan kollarka vilvanakkam" Thirukkural 827 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


வில்லின் வணக்கம் வணக்கமாக இருந்தாலும் தீங்கு செய்தலைக்குறித்தமையால், பகைவரிடத்திலும் அவருடைய சொல்லின் வணக்கத்தை நன்மையாகக் கொள்ளக் கூடாது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


வில்லினது வணக்கம் தீமையைக் குறித்தமை ஏதுவாகத் தாழச்சொல்லுஞ் சொல்லைப் பகைவார்மாட்டு நன்று சொன்னாரென்று கொள்ளாதொழிக. இது தாழச்சொல்லினும் தேறப்படா ரென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


வில்வணக்கம் தீங்கு குறித்தமையான் - வில்லினது வணக்கம் ஏற்றவர்க்குத் தீமை செய்தலைக் குறித்தமையால்; ஒன்னார் கண் சொல் வணக்கம் கொள்ளற்க - பகைவர் மாட்டுப் பிறக்கும் சொல்லினது வணக்கத்தையும் தமக்கு நன்மை செய்தலைக் குறித்தது என்று கருதற்க. '(தம் வணக்கம் அன்று என்பது தோன்றச் 'சொல்வணக்கம்' என்றும் வில்வணக்கம் வேறாயினும் வணங்குதல் ஒப்புமைபற்றி அதன் குறிப்பை ஏதுவாக்கியும் கூறினார். வில்லினது குறிப்பு அவனினாய வில்வணக்கத்தின்மேல் நிற்றலான். ஒன்னாரது குறிப்பும் அவரினாய சொல்வணக்கத்தின் மேலதாயிற்று. இதுவும் தீங்கு குறித்த வணக்கம் என்றே கொண்டு அஞ்சிக் காக்க என்பதாம். இவை மூன்று பாட்டானும் 'அவரைச் சொல்லால் தௌ¤யற்க' என்பது கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


வில் வணக்கம் தீங்கு குறித்தமையான் - வில்லின் வளைவாகிய வணக்கம் அதை ஏற்றவர்க்குத் தீமை செய்தலைக் குறித்தலால்; ஒன்னார்கண் சொல்வணக்கம் கொள்ளற்க - பகைவ ரிடத்துத் தோன்றும் பொய்யான பணிவுவணக்கம் தீமையன்றி நன்மை செய்தலைக் குறித்ததென்று கருதற்க. உள்ளத்தொடு பொருந்தாமற் சொல்லொடு மட்டும் கூடிய வணக்கமாதலால், பொய் வணக்கத்தைச் 'சொல்வணக்கம்' என்றும், வில் அறிவில்லாப் பொருளும் பிறன்வினை கொண்டதுமாயினும், வளைதலுந் தீங்குசெய்தலுமாகிய வினையொப்புமையால் அதன் குறிப்பை யேதுவாக்கியும், கூறினார். வில்லியின் தீய குறிப்பு வில்வளைவின்மேல் நிற்றல்போல் பகைவரின்தீய குறிப்பும் அவர் உடல் வளைவின்மேல் நிற்றலால், அஞ்சிக் காத்துக்கொள்க என்பதாம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


வில் வளைவது தீமை செய்யவே, பகைவர் வணங்கிப் பேசும் சொற்களும் அத்தன்மையவே; அதனால் அவர்தம் சொற்களை ஏற்றுக் கொள்ள வேண்டா.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பகைவரிடம் காணப்படும் சொல் வணக்கம் என்பது வில்லின் வணக்கத்தைப் போல் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதால், அதனை நம்பக் கூடாது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பகைவரின் வார்த்தை வணக்கத்தை உண்மை என்ற ஏற்க வேண்டாம் அது வில்லின் வளைதல் போன்று தீங்கு ஏற்படுத்தும்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


வில்லின் விளைவு தீமையைக் குறியாகக் கொண்டதே; இவ்வாறே பகைவரிடத்திலிருந்து வரும் வணக்கமான பேச்சையும் தீமைதரும் என்று தள்ளிவிட வேண்டும்.

Thirukkural in English - English Couplet:


To pliant speech from hostile lips give thou no ear;
'Tis pliant bow that show the deadly peril near! .

ThirukKural English Meaning - Couplet -Translation:


Since the bending of the bow bespeaks evil, one should not accept (as good) the humiliating speeches of one's foes.

ThiruKural Transliteration:


solvaNakkam onnaarkaN koLLaRka vilvaNakkam
theengu kuRiththamai yaan.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore