திருக்குறள் - 671     அதிகாரம்: 
| Adhikaram: vinaiseyalvakai

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.

குறள் 671 - திருவள்ளுவர் - ThiruValluvar

"soozhchchi mutivu thuniveydhal aththunivu" Thirukkural 671 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும், அவ்வாறு கொண்ட துணிவு காலந் தாழ்த்து நிற்பது குற்றமாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


சூழ்ச்சிக்கு எல்லை துணிவு பெறுதல்: அவ்வாறு துணிந்தவினை நீட்டித்தலின்கண்ணே கிடைக்குமாயின் அது தீதாம். இது வினைசெயத் துணிந்த காலத்து நீட்டிக்குமாயின் அதனை யறிந்து பகைவர் தம்மைக் காப்பார்: ஆதலால் நீட்டியாது விரைந்து வினை செய்யவேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் - விசாரத்திற்கு எல்லையாவது விசாரிக்கின்றான் 'இனி இது தப்பாது' என்னும் துணிவினைப் பெறுதல்; அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது - அங்ஙனம் துணிவுபெற்ற வினை. பின் நீட்டிப்பின்கண் தங்குமாயின் அது குற்றமுடைத்து. ('சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல்' எனவே, துணிவு எய்தும் அளவும் சூழவேண்டும் என்பது பெற்றாம். பின்னர்த் 'துணிவு' ஆகு பெயர். நீட்டிப்பு - செய்யுங் காலத்துச் செய்யாமை. அஃதுள்வழிக் காலக்கழிவாகலானும் பகைவர் அறிந்து அழித்தலானும் முடியாமையின் அதனைத் தீது என்றார்.) .

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல்-ஒன்றைப்பற்றி ஆராய்ந் தெண்ணுவதன் இறுதியாவது, இதை இன்னவாறு செய்ய வேண்டும் என்னும் தீர்மானத்தைக் கொள்ளுதலே; அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது-அத் தீர்மானத்தை உடனே நிறைவேற்றாது காலங்கடத்துவது குற்றமாகும். சூழ்ச்சி எதிர்ப்பும் தற்காப்பும் பற்றியதாயின், இதை எங்ஙனஞ் செய்வதென்பதே ஆராயப்படுவதாம். தாக்குதல் பற்றியதாயின், செய்வதா விடுவதா என்பதே முதற்கண்ணும், செய்வதாயின் அதை எங்ஙனஞ் செய்வதென்பது அதன் பின்னும், ஆராயப்படுவனவாம். ஆகவே, உடன்பாட்டுத்தீர்மானமே 'தாழ்ச்சியுள் தங்குதல்தீது' என்பது அறியப்படும். 'சூழ்ச்சி முடிவு துணிவெய்தல்' எனவே, துணிவெய்தும் வரை சூழவேண்டு மென்பதும், துணிவில் முடியாதவாறும் துணிவு காலந்தாழ்க்குமாறும் சூழ்வது தீங்குவிளைக்குமென்பதும், பெறப்படும். துணிந்த வினையை உடனே தொடங்காவிடின், தகுந்த காலந்தப்புதலாலும் ஊக்கங் குன்றுதலாலும் பகைவர் அறிந்தழித்தலாலும் வினைகெடுமாதலான், 'தாழ்ச்சியுள் தங்குதல் தீது' என்றார்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


ஆலோசனை செய்வதற்கு எல்லை என்பது யாதென்றால், ஆலோசிப்பவன் 'இனி இது தவறாது' என்று துணிவினைப் பெறுதலாகும். அப்படித் துணிந்தபின் நீட்டிக்கப்படுமானால் அது குற்றமுடையதாகிவிடும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஓர் ஆலோசனையின் முடிவு, செயலைச் செய்யும் துணிவைப் பெறுவதே, பெற்ற அத்துணிவைச் செயலாக்கக் காலம் தாழ்த்தினால் அது தீமையாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒரு செயலில் ஈ.டுபட முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்கள் பற்றிய ஆராய்ச்சியும் முடிவடைந்திருக்க வேண்டும். முடிவெடுத்த பிறகு காலந்தாழ்த்துவது தீதாக முடியும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


சூழ்நிலைகளை ஆராய்ந்து முடிவுகளை முன் நிறுத்தி செயல்பட துணியவேண்டும். அப்படி துணிந்தப்பின் செயல்படாமல் இருப்பது தீங்காகும்.

Thirukkural in English - English Couplet:


The Resolve is counsel's end, If resolutions halt
In weak delays, still unfulfilled, 'tis grievous fault.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Consultation ends in forming a resolution (to act); (but) delay in the execution of that resolve is an evil.

ThiruKural Transliteration:


soozhchchi mutivu thuNiveydhal aththuNivu
thaazhchchiyuL thangudhal theedhu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore