திருக்குறள் - 777     அதிகாரம்: 
| Adhikaram: pataichcherukku

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.

குறள் 777 - திருவள்ளுவர் - ThiruValluvar

"suzhalum isaivaendi vaendaa uyiraar" Thirukkural 777 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பரந்து நிற்க்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும் விரும்பாத வீரர், வீரக் கழலை காலில் கட்டிக்கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பரவும் புகழை விரும்பி, உயிரை விரும்பாதார், கழல் கட்டுதல் அழகுடைத்து. இது புகழ் விரும்பும் படை வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் - துறக்கத்துத் தம்மொடு செல்லாது வையத்தைச் சூழ்ந்து நிற்கும் புகழை வேண்டி உயிர் வாழ்தலை வேண்டாத வீரர்; கழல் யாப்புக்காரிகை நீர்த்து - கழல் கட்டுதல் அலங்கார நீர்மையை உடைத்து. (வையைத்தைச் சூழும் எனவே, அதன் பெருமை பெற்றாம். செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. சூழல் - அகத்திடல். துறக்கமும் புகழும் எளிதின் எய்துவராகலின், ஆபரணமாவது அதுவே என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


சுழலும் இசை வேண்டி-விண்ணகத்திற்குத் தம்முடன் வராது மண்ணகத்தையே சூழ்ந்து நிற்கும் புகழை விரும்பி; வேண்டா உயிரார்-இங்கு, உடலோடு கூடி உயிர்வாழ விரும்பாத மறவர்; கழல்யாப்புக் காரிகை நீர்த்து-தம் காலில் மறக்கழலைக் கட்டிக் கொள்ளுதல் ஒரு தனியழகு பெறுந்தன்மையதாம். 'சுழலும்' எனவே, அதற்குரிய செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. சூழ்தல் பார் முழுதும் பரவுதல். உருண்டையான தென்று பொருள்படும் உலகம் என்னும் பெயருக்கேற்பச் 'சுழலும்' என்றார். பிற அணிகள் பெண்டிர்க்குப்போல் ஆடவர்க்கு அழகு செய்யாமையின், ஆடவர்க்குச் சிறப்பாக வுரிய மறக் கழலணியைக் 'காரிகை நீர்த்து' என்றார். 'உயிர்' ஆகுபெயர். உயிர்வேண்டார் என்பதை வேண்டா வுயிரார் என்றது செய்யுள் நடை. மறக்கழலை வெண்டையம் என்பது உலக வழக்கு.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தம்முடன் சொர்க்கத்திற்கு வராது பூமியில் மட்டு் நிலைத்து நிற்கும் புகழை விரும்பி, உயிரையும் விரும்பாத வீரர், தம் கால்களில் வீரக்கழலைக் கட்டுவது அவர்க்கு அழகே.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


சூழ்ந்து பரவிடும் புகழை மட்டுமே விரும்பி உயிரைப் பற்றிக் கவலைப்படாத வீரர்களின் காலில் கட்டப்படும் வீரக்கழல் தனிப் பெருமை உடையதாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பரவும் புகழுக்காக உயிரையும் துறப்பவர்கள், காலின் அணிகலன்களை விலக்கிய நடனப்பெண் போன்றவர்கள்.

Thirukkural in English - English Couplet:


Who seek for world-wide fame, regardless of their life,
The glorious clasp adorns, sign of heroic strife.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The fastening of ankle-ring by those who disire a world-wide renown and not (the safety of) their lives is like adorning (themselves).

ThiruKural Transliteration:


suzhalum isaivaendi vaendaa uyiraar
kazhalyaappuk kaarikai neerththu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore