திருக்குறள் - 1031     அதிகாரம்: 
| Adhikaram: uzhavu

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

குறள் 1031 - திருவள்ளுவர் - ThiruValluvar

"suzhandrum erp pinnadhu ulagam adhanaal" Thirukkural 1031 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


உழவு ஒழிந்த எல்லா நெறிகளிலும் சுழன்று திரிந்தாலும் ஏருடையவர் வழியே வருவர் உலகத்தார்: ஆதலான் வருந்தியும் உழுதலே தலைமையுடையது. இஃது உழவு வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் - உழுதலான் வரும் மெய் வருத்தம் நோக்கிப் பிறதொழில்களைச் செய்து திரிந்தும், முடிவில் ஏர் உடையார் வழியதாயிற்று உலகம்; அதனால் உழந்தும் உழவே தலை - ஆதலான் எலலா வருத்தம் உற்றும், தலையாய தொழில் உழவே. (ஏர் - ஆகுபெயர். பிற தொழில்களால் பொருளெய்திய வழியும், உணவின் பொருட்டு உழுவார்கண் செல்ல வேண்டுதலின், 'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' என்றும், வருத்தமிலவேனும் பிற தொழில்கள் கடை என்பது போதர, 'உழந்தும் உழவே தலை' என்றும் கூறினார். இதனால் உழவினது சிறப்புக் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


சுழன்றும் உலகம் ஏர்ப் பின்னது- உழவுத் தொழிலால் உண்டாகும் உடல் வருத்தம் நோக்கி வேறு பல்வகைத் தொழில்களைச் செய்து திரிந்தாலும், அதன் பின்னும் வேளாரல்லாத உலகத்தா ரெல்லாரும் உழவுத் தொழிலின் வழிப்பட்டவரே; அதனால் உழந்தும் உழவே தலை- ஆதலால், எல்லா வருத்தமுமுற்றும் உழவுத் தொழிலே உலகில் தலையாயதாம். பிற தொழில்களாற் பொருள் தேடிய பின்பும் , உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவின்பொருட்டு உழவரிடமே செல்ல வேண்டியிருத்தலின், 'சுழன்று மேர்ப் பின்ன துலகம'் என்றும், பிற தொழில்கள் வருத்தமின்றிச் செய்வன வேனும் கடைப்பட்டவையென்பது தோன்ற 'உழவே தலை' என்றும் கூறினார். 'ஏர்' ஆகு பெயர். 'உலகம்' வரையறுத்த ஆகுபெயர். ஏகாரம் பிரிநிலை உம்மை யிரண்டனுள், முன்னது எச்சத்தின் பாற்பட்ட பின்மை; பின்னது இழிவின் பாற்பட்ட ஒத்துக்கொள்வு.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, வேறு வேறு தொழிலுக்குச் சென்றாலும் உலகம் ஏரின் பின்தான் இயங்குகிறது. அதனால் எத்தனை வருத்தம் இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பல மாற்றங்களுடன் சுழலும் உலகம் உழவுத் தொழிலை பின்பற்றியே இருக்கும் ஆகையால் பல தொழில் பழகியும் உழவே தலைமையானது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


உழவின் வருத்தத்தைக் கண்டு, பிற தொழில்களைச் செய்து திரிந்தாலும், முடிவில் ஏருடையவரையே உலகம் உணவுக்கு எதிர்பார்த்தலால், உழவே மிகவும் சிறந்தது.

Thirukkural in English - English Couplet:


Howe'er they roam, the world must follow still the plougher's team;
Though toilsome, culture of the ground as noblest toil esteem.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Agriculture, though laborious, is the most excellent (form of labour); for people, though they go about (in search of various employments), have at last to resort to the farmer.

ThiruKural Transliteration:


suzhandrum-Erp pinnadhu ulagam adhanaal
uzhandhum uzhavae thalai.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore