Kural 613

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

thaaLaaNmai ennum thakaimaikkaN thangitrae
vaeLaaNmai ennunhj serukku.

🌐 English Translation

English Couplet

In strenuous effort doth reside
The power of helping others: noble pride!.

Explanation

The lustre of munificence will dwell only with the dignity of laboriousness or efforts.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

பிறர்க்கு உதவிசெய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.

2 மணக்குடவர்

முயற்சியாகிய நன்மையின்கண்ணே கிடந்தது: பிறர்க்கு உபகரித்தலாகிய பெருமிதம். இஃது அறஞ் செய்தலும் இதனாலே யாகுமென்றது.

3 பரிமேலழகர்

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்று - முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த குணத்தின்கண்ணே நிலை பெற்றது; வேளாண்மை என்னும் செருக்கு - எல்லார்க்கும் உபகாரம் செய்தல் என்னும் மேம்பாடு. (பொருள் கைகூடுதலான், உபகரித்தற்கு உரியார் முயற்சி உடையார் என்பார், அவ்வக் குணங்கள்மேல் வைத்தும், அது பிறர்மாட்டு இல்லை என்பார் 'தங்கிற்றே' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் முயற்சியது சிறப்புக் கூறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

வேளாண்மை என்னும் செருக்கு - எல்லார்க்கும் நன்றிசெய்தல் என்னும் பெருமிதம் ; தாளாண்மை என்னும் தகைமைக் கண்ணே தங்கிற்று - விடா முயற்சி என்று சொல்லப்படும் உயர்ந்த பண்பையே நிலைக்களமாகக் கொண்டதாம். வெறுங்கையால் வேளாண்மை செய்தல் கூடாமையின் , வேளாண்மைக்கு இன்றியமையாத பொருள் தாளாண்மையாலேயே வருதல் பற்றி 'தகைமைக்கட்டங்கிற்றே' என்றார் . பிரிநிலை யேகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

எல்லோருக்கும் உபகாரம் செய்தல் என்னும் மேம்பாடு, முயற்சி என்று சொல்லப்பட்ட உயர்ந்த குணத்தினிடத்தில் நிலை பெற்றிருப்பதாகும்.

6 சாலமன் பாப்பையா

முயற்சி எனப்படும் உயர்ந்த குணத்தில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை, நிலைபெற்றிருக்கிறது.

7 கலைஞர் மு.கருணாநிதி

பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடா முயற்சி மேற்கொள்ளக் கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும்.

8 சிவயோகி சிவக்குமார்

ஊக்கம் என்ற உயர்பண்பின் வெளிப்பாடே அடுத்தவருக்கு உதவிடும் மகிழ்வை தருகிறது.

More Kurals from ஆள்வினையுடைமை

அதிகாரம் 62: Kurals 611 - 620

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature