திருக்குறள் - 1103     அதிகாரம்: 
| Adhikaram: punarchchimakizhdhal

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.

குறள் 1103 - திருவள்ளுவர் - ThiruValluvar

"thaamveezhvaar mendroal thuyilin inidhukol" Thirukkural 1103 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில் போல் இனிமை உடையதோ?.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தம்மால் விரும்பப்படுவாரது மெல்லிய தோளின்கண் துயிலுந் துயிலினும் இனிதோ? இந்திரனது சுவர்க்கம். இது சுவர்க்கத்தின்பமும் இதுதானே யென்று கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(நிரதிசய இன்பத்திற்குரிய நீ இச்சிற்றின்பத்திற்கு இன்னையாதல் தகாது என்ற பாங்கற்குத் தலைவன் சொல்லியது.) தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் - ஐம்புலன்களையும் நுகர்வார்க்குத் தாம் விரும்பும் மகளிர் மெல்லிய தோளின்கண் துயிலும் துயில் போல வருந்தாமல் எய்தலாமோ; தாமரைக் கண்ணான் உலகு - அவற்றைத் துறந்த தவயோகிகள் எய்தும் செங்கண்மால் உலகம். (ஐம்புலன்களையும் நுகர்வார் என்னும் பெயர் அவாய் நிலையான் வந்தது. 'இப்பெற்றித்தாய துயிலை விட்டுத் தவயோகங்களான் வருந்த வேண்டுதலின், எம்மனோர்க்கு ஆகாது' என்னும் கருத்தால், 'இனிதுகொல்' என்றான். இந்திரன் உலகு என்று உரைப்பாரும் உளர். தாமரைக்கண்ணான் என்பது அவனுக்குப் பெயரன்மையின், அஃது உரையன்மையறிக.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(நிலையான பேரின்பத்தைப் பெறற்குரிய நீ இச்சிற்றின்பத்திற்கு இங்ஙனம் நைவது தகாதென்று கழறிய பாங்கற்குச் சொல்லியது) தாமரைக் கண்ணான் உலகு - நீ மிகச் சிறந்ததாக வுயர்த்திக் கூறும் செங்கண்மாலின் வீட்டுலகம்; தாம் வீழ்வார் மெல்தோள் துயிலின் இனிதுகொல்- ஐம்புல வின்பம் நுகர்வார்க்கு தாம் விரும்பும் மகளிர் தோளிடத்துத் துய்க்கும் துயில்போல இன்பஞ்சிறந்ததோ? இஃது ஒரு பெண்ணின்பப் பித்தன் கூற்று; "தவலருந் தொல்கேள்வித் தன்மை யுடையார் இகலில ரெஃகுடையார் தம்முட் குழீஇ நகலின் இனிதாயிற் காண்பா மகல்வானத் தும்ப ருறைவார் பதி." (நாலடி.137) என்னும் போக்கில் அமைந்தது. ஐம்புல வின்பம் நுகர்வார் என்னும் பெயர் "கண்டுகேட் டுண்டுயிர்த்து" என்னுங் குறளினின் றமைக்கப்பட்டது. தாமரைக்கண்ணா னுலகை "இந்திரனது சுவர்க்கம்" என்பர் மணக்குடவ பரிப்பெருமாளர். இந்திரனுக்குத் தாமரைக் கண்ணான் என்னும் பெயரின்மையானும்; திருவள்ளுவர் சிவனுந்திருமாலும் ஒன்றென்னும் கடவுண் மதத்தாராதலின், சிவனடியார்க்கும் திருமாலடியார்க்கும் பொதுவாக ஒரே வீட்டுலகங்கொண்டாராதலானும்; பெண்ணின்பச் சிறப்பை உயர்வு நவிற்சியாகக் கூறுதற்கு வீட்டுலகத் தின்பத்தோ டுறழ்வதே யேற்குமாதலானும்; அவ்வுரை பொருந்தாதென்க. இனி, இதனாலே,சிவ வீட்டுலகமும் திருமால் வீட்டுலகமும் வெவ்வேறென்று கொண்டு ஏற்றத்தாழ்வு கூறும், குறுநோக்காளர் கூற்றும் பொருந்தாமை காண்க. இனி, ஆரியச் சூழ்ச்சியான முத்திருமேனிக் கொள்கையையும் நான்முகன் என்னும் படைப்புத் தெய்வத்தையும் தமிழ வறிஞர் ஏற்காமையால், "ஆயிரம் வேள்வியின் எய்துவாராக அருமறை கூறும் அயனுலகு" என்றும், "தாமரைக் கண்ணான் என்பது தாமரையிடத்தான் என்றது." என்றும், காலிங்கர் கூறியதும் பெருந்தவறாம். இனி, 'இனிது' என்பதற்கு 'எளிது' என்று பரிமேலழகர் பொருள் கொண்டதும் தவறாம். 'தோட்டுயில்' என்பது இடக்கரடக்கல். 'கொல்' வினாவிடைச்சொல். திருமாலுக்குத் தாமரைக் கண்ணான் என்னும் பெயர் கண்ணன் தோற்றரவினின்று தோன்றியதாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில் போல் இனிமை உடையதோ?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


தாமரைக் கண்ணான் உலகம் என்றெல்லாம் சொல்கிறார்களே, அது என்ன! அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது போல அவ்வளவு இனிமை வாய்ந்ததா?.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


முழு ஓய்வுக்காய் மென்மையான தோள் உடையாளுடன் உறங்குவதைப் போன்ற இனிமையானது உண்டோ மாறுபட்டதைக் காண்பவர் உலகில்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


தாம் விரும்பும் மகளிரின் மென்மையான தோள்மேல் துயிலும் இன்பத்தைப் போலத் தாமரைக் கண்ணானின் போக உலகத்து இன்பமும் இனிதாக இருக்குமோ?

Thirukkural in English - English Couplet:


Than rest in her soft arms to whom the soul is giv'n,
Is any sweeter joy in his, the Lotus-eyed-one's heaven?

ThirukKural English Meaning - Couplet -Translation:


Can the lotus-eyed Vishnu's heaven be indeed as sweet to those who delight to sleep in the delicate arms of their beloved ?.

ThiruKural Transliteration:


thaamveezhvaar mendroaL thuyilin inidhukol
thaamaraik kaNNaan ulagu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore