தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து.
Transliteration
thaardhaangich chelvadhu thaanai thalaivandha
poardhaangum thanmai aRindhu.
🌐 English Translation
English Couplet
A valiant army bears the onslaught, onward goes,
Well taught with marshalled ranks to meet their coming foes.
Explanation
That is an army which knowing the art of warding off an impending struggle, can bear against the dust-van (of a hostile force).
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
7 scholars' interpretations
1 மு.வரதராசனார்
தன் மேல் எதிர்த்து வந்த பகைவரின் போரைத்தாங்கி, வெல்லும் தன்மை அறிந்து அவனுடைய தூசிப்படையை எதிர்த்துச் செல்லவல்லதே படையாகும்.
2 மணக்குடவர்
உற்றவிடத்து உற்றபோரினைத் தடுக்கும் இயல்பறிந்து, தாரைப் பொறுத்து மேற்செல்லவல்லது படையாவது. இது முந்திச் செல்லவேண்டுமென்பதூஉம் செல்லுங்கால் இடமறிந்து செல்ல வேண்டுமென்பதூஉம் கூறிற்று.
3 பரிமேலழகர்
தலை வந்த போர் தாங்கும் தன்மை அறிந்து - மாற்றாரால் வகுக்கப்பட்டுத் தன்மேல் வந்த படையின் போரைவிலக்கும் வகுப்பு அறிந்து வகுத்துக் கொண்டு; தார் தாங்கிச் செல்வது தானை - அவர் தூசியைத் தன்மேல் வாராமல் தடுத்துத்தான் அதன்மேற்செல்வதே படையாவது. (படை வகுப்பாவது: வியூகம். அஃது எழுவகை உறுப்பிற்றாய், வகையான் நான்காய், விரியான் முப்பதாம். உறுப்பு ஏழாவன: உரம் முதல் கோடி ஈறாயின.வகை நான்காவன: தண்டம், மண்டலம், அசங்கதம், போகம் என இவை. விரி முப்பதாவன: தண்டவிரி பதினேழும், மண்டலவிரி இரண்டும், அசங்கத விரி ஆறும், போக விரி ஐந்தும் என இவை. இவற்றின் பெயர்களும் இலக்கணமும் ஈண்டு உரைப்பின் பெருகும், அவை எல்லாம் வடநூல்களுள் கண்டுகொள்க, இவை நான்கு பாட்டானும் படையினது இலக்கணம் கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
தலைவந்த போர் தாங்கு தன்மை அறிந்து-பகைவரால் வகுக்கப்பட்டுத் தன்மேல் வந்த படையின் போரை விலக்கும் வகையறிந்து, அதற்கேற்பத் தன்னை வகுத்துக்கொண்டு; தார்தாங்கிச் செல்வது-பகைவர் தூசிப்படையைத் தன்மேல் வராமல் தடுத்துத் தான் அதன்மேற் சென்று தாக்குவதே; தானை-சிறந்த படையாவது. படை வகுப்பு இடத்திற்கேற்பத் தண்டம், மண்டலம், சக்கரம், சகடம் (தேர்), தாமரை முதலிய பல்வேறு வடிவில் அமைக்கப் பெறுவதாகும். படையுறுப்புக்கள் நெற்றி, தார் (தூசி), கை, பேரணி, கூழை என ஐந்தாம். "தூசியுங் கூழையு நெற்றியுங் கையும் அணியு மென்ப தப்படைக் குறுப்பே." (403) "கூழை யென்பது பேரணி யாகும்." (404) "தாரே முன்செல் கொடிப்படை யாகும்." (405) என்பன பிங்கலம். நெற்றியென்பது தாரின் முற்பகுதியும், கை என்பது படைவகுப்பின் இருபக்கமும், கூழை யென்பது பேரணியின் பிற்பகுதியும், போலும்! "படை வகுப்பாவது வியூகம்; அஃது எழுவகை யுறுப்பிற்றாய், வகையானான்காய், விரியான் முப்பதாம். உறுப்பேழாவன உரமுதற் கோடியீறாயின. வகை நான்காவன தண்டம், மண்டலம், அசங்கதம், போகமெனவிவை. விரிமுப்பதாவன தண்டவிரி பதினேழும், மண்டலவிரி இரண்டும், அசங்கத விரியாறும், போகவிரி ஐந்து மெனவிவை. இவற்றின் பெயர்களும் இலக்கணமும் ஈண்டுரைப்பிற் பெருகும். அவையெல்லாம் வடநூல்களுட் கண்டுகொள்க." என்று பரிமேலழகர், பண்டைத் தமிழ் மறநூல்கள் இறந்துபட்டபின், அவற்றின் விரிபுந் திரிபுமான வடநூன் முறையைத் தென்னாட்டிற் குரியதாகக் கூறியிருப்பது பெருந்தவறாம்.
5 சாலமன் பாப்பையா
தன்மீது வந்த பகைவரின் போரைத் தடுக்கும் முறையை அறிந்து அவர்களில் முதலாவதாக வந்து சண்டையிடும் காலாட்படை ( தூசிப்படை, தேர்ப்படை, கொடிப்படை, முன்னணிச் சேனை என்றும் பெயர்) தன்மீது வராமல் தடுப்பதே படை.
6 கலைஞர் மு.கருணாநிதி
களத்தில், முதலில் எதிர்கொள்ளும் போரைத் தாங்கித் தகர்க்கும் ஆற்றலை அறிந்திருப்பின், அதுவே வெற்றி மாலை தாங்கிச் செல்லக்கூடிய சிறந்த படையாகும்.
7 சிவயோகி சிவக்குமார்
வாழைத்தார் அடுக்கியது போல் படைக்களத்தில் போரை வழிநடத்த அறிந்திருக்க வேண்டும்.
More Kurals from படைமாட்சி
அதிகாரம் 77: Kurals 761 - 770