தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும்.
Transliteration
thaeraan piRanaith theLindhaan vazhimuRai
theeraa idumpai tharum.
🌐 English Translation
English Couplet
Who trusts an untried stranger, brings disgrace,
Remediless, on all his race.
Explanation
Sorrow that will not leave even his posterity will come upon him chooses a stranger whose character he has not known.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
7 scholars' interpretations
1 மு.வரதராசனார்
மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.
2 மணக்குடவர்
பிறனை ஆராயாதே வழிமுறையென்று தெளிந்தவனுக்கு அத்தெளிவு தீர்தலில்லாத துன்பமுண்டாக்கும். இது தன் குலத்திலுள்ளாருள் அமாத்தியராயினார் வழியில் உள்ளாரைத் தேறலா மென்றது.
3 பரிமேலழகர்
பிறனைத் தேரான் தெளிந்தான் - தன்னோடு இயைபுடையன் அல்லாதானைப் பிறப்பு முதலியவற்றானும் செயலானும் ஆராயாது தெளிந்த அரசனுக்கு, வழிமுறை தீரா இடும்பை தரும் - அத்தெளிவு தன் வழிமுறையினும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும். (இயைபு: தன் குடியோடு தொடர்ந்த மரபு. இதனானே அதுவும் வேண்டும் என்பது பெற்றாம். தெளிதல் அவன்கண்ணே வினையை வைத்தல். அவ்வினை கெடுதலால், தன் குலத்துப் பிறந்தாரும் பகைவர் கைப்பட்டுக்கீழாய்விடுவர் என்பதாம். நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
பிறனைத் தேரான் தெளிந்தான் - தன்னொடு தொடர்பற்ற ஒருவனை ஒருவழியாலும் ஆராயாது தெளிந்த அரசனுக்கு ; வழிமுறை தீரா இடும்பை தரும் - அத்தெளிவு அவன் வழியினர்க்கும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும். தொடர்பு தன் குடியோடியைந்த உறவு . தெளிதல் வினைத்தலைவனாக்குதல் . அவன் வினைக்கேட்டால் அரசனும் அவன் வழியினரும் அழிவர் என்பதாம் . நான்காம் வேற்றுமையுருபும் எச்சவும்மையும் தொக்கன , தேரான்-எதிர்மறை முற்றெச்சம்.
5 சாலமன் பாப்பையா
நாட்டுச் சிந்தனைகளில் பற்று இல்லாதவனை, அவன் பின்னணி பற்றி ஆராயாது பதவியில் அமர்த்தினால் அச்செயல் நீங்காத துன்பத்தைத் தரும்.
6 கலைஞர் மு.கருணாநிதி
ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக் கொண்டால் அவரால் வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்.
7 சிவயோகி சிவக்குமார்
தன்னளவில் தேர்ச்சிப் பெறாமல் அடுத்தவர் தேர்ச்சிப் பெற வழிகள் செய்தால் மாறாத துன்பம் ஏற்படும்.
More Kurals from தெரிந்துதெளிதல்
அதிகாரம் 51: Kurals 501 - 510