தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு.
Transliteration
thaLLaa viLaiyuLum thakkaarum thaazhvilaach
chelvarum saervadhu naadu.
🌐 English Translation
English Couplet
Where spreads fertility unfailing, where resides a band,
Of virtuous men, and those of ample wealth, call that a 'land' .
Explanation
A kingdom is that in which (those who carry on) a complete cultivation, virtuous persons, and merchants with inexhaustible wealth, dwell together.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
7 scholars' interpretations
1 மு.வரதராசனார்
குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.
2 மணக்குடவர்
தப்பாமல் விளையும் நிலங்களும் தகுதி யுடையாரும் தாழ்வில்லாத செல்வரும் சேர்வது நாடு. தள்ளா விளையுள்- மழையில்லாத காலத்தினும் சாவிபோகாத நிலம்.
3 பரிமேலழகர்
தள்ளா விளையுளும் - குன்றாத விளையுளைச் செய்வோரும்; தக்காரும் - அறவோரும்; தாழ்வு இலாச் செல்வரும் - கேடு இல்லாச் செல்வமுடையோரும்; சேர்வது நாடு - ஒருங்கு வாழ்வதே நாடாவது: (மற்றை உயர்திணைப் பொருள்களோடும் சேர்தல்தொழிலோடும் இயையாமையின், 'விளையுள்' என்பது உழவர்மேல் நின்றது. குன்றாமை: எல்லா உணவுகளும் நிறைய உளவாதல். இதனான் வாழ்வார்க்கு வறுமையின்மை பெறப்பட்டது. அறவோர் - துறந்தோர், அந்தணர் முதலாயினார். 'நற்றவஞ்செய்வார்க்கு இடம்: தவம் செய்வார்க்கும் அஃது இடம்' (சீவக. நாமக.48) என்றார் பிறரும். இதனான் அழிவின்மை பெறப்பட்டது. கேடு இல்லாமை - வழங்கத் தொலையாமை. செல்வர் - கலத்தினும் காலினும் அரும்பொருள் தரும் வணிகர். இதனான் அரசனுக்கும் வாழ்வார்க்கும் பொருள் வாய்த்தல் பெறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
தள்ளா விளையுளும்- குறையாத விளைபொருளும்; தக்காரும் - தகுதியுள்ள பெரியோரும்; தாழ்வு இல்லாச் செல்வரும் - கேடில்லாத செல்வமுடையோரும்; சேர்வது நாடு - முன்கூறப்பட்ட செங்கோலரசனோடும் சிறந்த அமைச்சனோடும் பொருந்தியிருப்பதே நல்ல நாடாவது. தள்ளாவிளையுள் என்பது தாழ்ந்த வகையினதாகத் தள்ளப்படாத விளையுள் என்றுமாம். விளையுள் என்பது உழவரையும் ஒருமருங்கு குறிக்குமேனும், இயற்கையுஞ் செயற்கையுமாகிய இருவகை விளையுள் இருப்பதனாலும், 'சேர்வது' என்பது கூடி அல்லது பொருந்தியிருப்பது என்றே பொருள்படுதலாலும், "பலவயி னானும் எண்ணுத்திணை விரவுப்பெயர்" (தொல். கிளவி.51) வழுவன்மையானும், "மற்றை யுயர்திணைப் பொருள்களோடுஞ் சேர்தற் றொழிலோடும் இயையாமையின், விளையுளென்பது உழவர்மேனின்றது." என்று பரிமேலழகர் கூறுவது பொருந்தாது. தக்காராவார் புலவரும் அடியாரும் முனிவரும். தாழ்விலாச் செல்வரென்றது காலினுங் கலத்தினும் பொருளீட்டும் இருவகை வணிகரை. செல்வத்திற்குத் தாழ்வின்மை வழங்கத் தொலையாமையும் வருவாய் குன்றாமையும் பல்துறைப்பட்டிருத்தலும். செங்கோலரசனோடும் சிறந்த அமைச்சனோடும் என்பது பாலால் வந்தது. ஆகவே, அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்னும் நால்வகுப்பாராலும் விளையும், அறிவு காவல் செல்வம் உணவு ஆகிய நால்வகைப் பொருளும் சிறந்தது நன்னாடு என்பதாம்.
5 சாலமன் பாப்பையா
குறையாத உற்பத்தியைத் தரும் உழைப்பாளர்களும், அற உணர்வு உடையவர்களும், சுயநலம் இல்லாத செல்வரும் சேர்ந்து வாழ்வதே நாடு.
6 கலைஞர் மு.கருணாநிதி
செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும், செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும்.
7 சிவயோகி சிவக்குமார்
வெறுக்க முடியாதன விளைவதும், தகுதியான மக்களும், குறையாத செல்வம் பெற்றவரும் கூடி இருப்பது நாடு.
More Kurals from நாடு
அதிகாரம் 74: Kurals 731 - 740