தணந்தமை சால அறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள்.
Transliteration
thanandhamai saala arivippa poalum
manandha-naal veengiya thoal.
🌐 English Translation
English Couplet
These withered arms, desertion's pangs abundantly display,
That swelled with joy on that glad nuptial day.
Explanation
The shoulders that swelled on the day of our union (now) seem to announce our separation clearly (to the public).
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், ( இப்போது மெலிந்தும்) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவை போல் உள்ளன.
2 மணக்குடவர்
காதலர் கூடின நாள்களிற் பூரித்ததோள்கள். அவர் நீங்கினமையை மிகவும் பிறர்க்கு அறிவிப்பன போலாகாநின்றன. கருவியைக் கருத்தாவாகக் கூறினார். பிரிவிடை யாற்றாளாகிய தலைமகள் தனதுதோள் வாட்ட முற்றதுகண்ட தோழிக்குச் சொல்லியது.
3 பரிமேலழகர்
(இதுவும் அது.) மணந்த நாள் வீங்கிய தோள் - காதலர் மணந்த ஞான்று, இன்ப மிகுதியால் பூரித்த நின் தோள்கள்; தணந்தமை சால அறிவிப்ப போலும் - இன்று அவர் பிரிந்தமையை விளங்க உணர்த்துவது போல் மெலியா நின்றன, இது தகாது. ('அன்றும் அவ்வாறு பூரித்து இன்றும் இவ்வாறு மெலிந்தால், இரண்டும் கண்டவர் கடிதின் அறிந்து அவரைத் தகவின்மை கூறுவர்' என்பதாம்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
மணந்தநாள் வீங்கிய தோள்- காதலர் மணந்த நாளில் மகிழ்ச்சி மிகுதியாற் பூரித்த உன் தோள்கள்; தணந்தமை சால அறிவிப்ப போலும்- இன்று அவர் பிரிந்தமையை விளக்கமாகப் பிறர்க்கு உணர்த்துவன போல் மெலிவடைகின்றன. இது கூடாது. அன்று பூரித்ததும் இன்று மெலிந்ததும் ஆகிய இரண்டையும் கண்டவர், உண்மையுணர்ந்து தலைமகனைக் குறை கூறுவர் என்பதாம்.
5 சாலமன் பாப்பையா
அவர் என்னை மணந்தபோது இன்பத்தால் பருத்த என் தோள்கள், இன்று மெலிந்து அவர் என்னைப் பிரிந்திருப்பதை மற்றவர்க்குத் தெரிவிக்கும்.
6 கலைஞர் மு.கருணாநிதி
தழுவிக் கிடந்த போது பூரித்திருந்த தோள், இப்போது மெலிந்து காணப்படுவது; காதலன் பிரிவை அறிவிப்பதற்காகத்தான் போலும்.
7 சிவயோகி சிவக்குமார்
பிரிந்திருப்பதை அழுத்தமாய் அறிவிப்பது போல் உள்ளது மணம் முடித்த நாட்களில் வீங்கி இருந்த தோள்.
8 புலியூர்க் கேசிகன்
காதலரோடு கூடியிருந்த நாட்களிலே பூரித்திருந்த தோள்கள் மெலிவடைந்து, அவருடைய பிரிவைப் பிறருக்கு நன்றாகத் தெரிவிப்பவை போல் உள்ளனவே!
More Kurals from உறுப்புநலனழிதல்
அதிகாரம் 124: Kurals 1231 - 1240