Kural 1319

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர் இந்நீரர் ஆகுதிர் என்று.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

thannai unarththinum kaayum pirarkkum-neer
inneerar aakudhir endru.

🌐 English Translation

English Couplet

I then began to soothe and coax, To calm her jealous mind;
'I see', quoth she, 'to other folks How you are wondrous kind' .

Explanation

Even when I try to remove her dislike, she is displeased and says, "This is the way you behave towards (other women)."

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும், நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று ‌சொல்லிச் சினம் கொள்வாள்.

2 மணக்குடவர்

தன்னை ஊடல் தீர்த்தற்கு உணர்த்தினும், பிறர்க்கும் நீர் இவ்வாறு செய்வீரே யென்றுசொல்லி வெகுளும். இது தன்னைப் போற்றினும் குற்றமென்று கூறியது.

3 பரிமேலழகர்

(இதுவும் அது.) தன்னை உணர்த்தினும் காயும் - இவ்வாற்றான் ஊடிய தன்னை யான் பணிந்து உணர்த்துங்காலும் வெகுளா நிற்கும்; பிறர்க்கும் நீர் இந்நீரர் ஆகுதிர் என்று - பிற மகளிர்க்கும் அவர் ஊடியவழி இவ்வாறே பணிந்துணர்த்தும் நீர்மையையுடையீராகுதிர், என்று சொல்லி. ('இவள் தெளிவித்தவழியும் தெளியாள் என்பதுபற்றி என்மேல் ஏற்றிய தவற்றை உடம்பட்டுப் பணிந்தேன்; பணிய, அது தானும் புலத்தற்கு ஏதுவாய் முடிந்தது. இனி இவள் மாட்டு செய்யத் தகுவது யாது'? என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(இதுவுமது) தன்னை உணர்த்தினும் - இவ்வகையிற் கரணகமின்றி யூடிய தன்னை யான் பணிந்துரைத்து ஊடல் தீர்க்குங்காலும், பிறர்க்கும் நீர் இந்நீரர் ஆகுதிர் என்று காயும் - பிறமகளிர்க்கும் நீர் அவரூடியவிடத்து இவ்வாறே பணிந்துணர்த்துந் தன்மையையுடையீராகுதிர் என்று சினங்கொள்வாள். இவள் நான் தெளிவித்த விடத்துந் தெளியாமை பற்றி, வேறு வழியில்லாது, என்மேல் இட்டேற்றிய பொய்யான தவற்றையும் உடம்பட்டுப் பணிந்தேன். ஆனால், நான் எதிர்பாராவண்ணம் அதுவும் புலத்தற் கேதுவாய் முடிந்தது. இனி இவள்பாற் செய்யத் தக்க தென்னவென்று தெரியாது மயங்கித் தியங்குகின்றேன் என்பதாம்.

5 சாலமன் பாப்பையா

ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும். நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று சொல்லி சினம் கொள்வாள்.

6 கலைஞர் மு.கருணாநிதி

நான் பணிந்து போய் அவள் ஊடலை நீக்கி மகிழ்வித்தாலும், உடனே அவள் ஓ! நீர் இப்படித்தான் மற்ற பெண்களிடமும் நடந்து கொள்வீரோ? என்று சினந்தெழுவாள்.

7 சிவயோகி சிவக்குமார்

பாராட்டி தான்படும் இன்னலை உணர்த்தினாலும் வறுந்தும், பிறரையும் இப்படித்தான் சமாதானம் செய்கிறீர் என்று.

8 புலியூர்க் கேசிகன்

அவள் ஊடிப் பிணங்கிய போது அதைத் தெளிவித்து இன்புறுத்தினாலும், ‘நீர் பிறமகளிர்க்கும் இத்தன்மையரே ஆவீர்’ என்று, என்மேற் சினம் கொள்வாள்.

More Kurals from புலவி நுணுக்கம்

அதிகாரம் 132: Kurals 1311 - 1320

Related Topics

Because you're reading about Subtleties of Sulking

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature