திருக்குறள் - 1277     அதிகாரம்: 
| Adhikaram: kuripparivuruththal

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.

குறள் 1277 - திருவள்ளுவர் - ThiruValluvar

"thannan thuraivan thanandhamai namminum" Thirukkural 1277 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


குளிர்ந்த துறையை உடைய காதலன் பிரிந்த பிரிவை நம்மை விட முன்னம‌ே நம்முடைய வளையல்கள் உணர்ந்து கழன்று விட்டனவே!.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


குளிர்ந்த துறையையுடையவன் நம்மை நீங்கினமையை நாமறிவதற்கும் முன்னே வளைகள் அறிந்தன.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) தண்ணந்துறைவன் தணந்தமை - குளிர்ந்த துறையை உடையவன் நம்மை மெய்யாற் கூடியிருந்தே மனத்தாற் பிரிந்தமையை; நம்மினும் வளை முன்னம் உணர்ந்த - அவன் குறிப்பான் அறிதற்குரிய நம்மினும் இவ்வளைகள் முன்னே அறிந்தன. (கருத்து நிகழ்ந்ததாகலின், 'தணந்தமை' என்றும், 'யான் தெளிய உணர்தற்கு முன்னே தோள்கள் மெலிந்தன' என்பாள், அதனை வளைமேலேற்றி, அதுதன்னை உணர்வு உடைத்தாக்கியும் கூறினாள்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவுமது) தண்ணந் துறைவன் தணந்தமை- குளிர்ந்த துறையை யுடையவர் நம்மை உடம்பாற் கூடியிருந்தே உளத்தாற் பிரிந்தமையை; நம்மினும் முன்னம் வளை உணர்ந்த - அவர் குறிப்பாலறியக் கூடிய நம்மினும் முற்பட்டு இவ் வளையல்கள் நுணுகி யறிந்தன. 'தணந்தமை' என்று இறந்த காலத்திற் கூறியது கருத்து நிகழ்வு பற்றியும் தேற்றம் பற்றியும் வந்த காலவழுவமைதி. மன நோவால் தோள் மெலிவும் தோள் மெலிவால் வளை கழல்வும் நிகழ்ந்திருக்கவும், மனத்திற்கு முன்னம் வளைகள் அறிந்து கழன்றன வென்று அவற்றை அறிவுஞ் செயலு முடையனவாகக் கூறியிருப்பது, துயர் மடமையின் (pathetic fallacy) பாற்படும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


குளிர்ந்த துறைகளுக்குச் சொந்தக்காரரான அவர் என்னை உடலால் கூடி உள்ளத்தால் பிரிந்திருப்பதை என்னைக் காட்டிலும் என் கை வளையல்கள் முன்னமே அறிந்துவிட்டன.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


குளிர்ந்த துறைகளுக்குச் சொந்தக்காரரான அவர் என்னை உடலால் கூடி உள்ளத்தால் பிரிந்திருப்பதை என்னைக் காட்டிலும் என் கை வளையல்கள் முன்னமே அறிந்துவிட்டன.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


குளிர்ச்சிக்கு வழிகாட்டுபவன் பிரிந்ததை நம்மைவிட முன்னமே உணர்ந்தன வளையல்கள்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


குளிர்ந்த நீர்த் துறைக்கு உரியவனாகிய நம் காதலன் நம்மைப் பிரிந்ததனை, நம்மைக் காட்டிலும், நம் கைவளையல்கள் முன்னதாகவே உணர்ந்து தாமும் கழன்றனவே!

Thirukkural in English - English Couplet:


My severance from the lord of this cool shore,
My very armlets told me long before.

ThirukKural English Meaning - Couplet -Translation:


My bracelets have understood before me the (mental) separation of him who rules the cool seashore.

ThiruKural Transliteration:


thannan thuraivan thanandhamai namminum
munnam unarndha valai.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore