தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
Transliteration
thavamaRaindhu allavai seydhal pudhalmaRaindhu
vaettuvan puLsimizhth thatru.
🌐 English Translation
English Couplet
'Tis as a fowler, silly birds to snare, in thicket lurks.
When, clad in stern ascetic garb, one secret evil works.
Explanation
He who hides himself under the mask of an ascetic and commits sins, like a sportsman who conceals himself in the thicket to catch birds.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.
2 மணக்குடவர்
தவத்திலே மறைந்து தவ மல்லாதவற்றைச் செய்தல் வேட்டுவன் தூற்றிலே மறைந்து புள்ளைப் பிணித்தாற் போலும். அர்ச்சுனன் தவமறைந்தல்லவை செய்தான்.
3 பரிமேலழகர்
தவம் மறைந்து அல்லவை செய்தல் - அவ் வலிஇல் நிலைமையான் தவவேடத்தின்கண்ணே மறைந்து நின்று தவமல்லவற்றைச் செய்தல், வேட்டுவன் புதல் மறைந்து புள் சிமிழ்த்தற்று - வேட்டுவன் புதலின் கண்ணே மறைந்து நின்று புட்களைப் பிணித்தாற்போலும். ( 'தவம்' ஆகுபெயர்.தவம் அல்லவற்றைச் செய்தலாவது, பிறர்க்கு உரிய மகளிரைத் தன்வயத்தாக்குதல், இதுவும் இத்தொழில் உவமையான் அறிக.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
தவம் மறைந்து அல்லவை செய்தல்-மனத்தை யடக்கும் வலிமையில்லாதவன் தவக்கோலத்தின்கண் மறைந்து நின்று கூடா வொழுக்கம் ஒழுகுதல்; வேட்டுவன் புதல் மறைந்து புள் சிமிழ்த்த அற்று-வேடன் புதரின்கண் மறைந்து நின்று பறவைகளை வலையாற் பிணித்தாற் போலும். 'தவம் ' ஆகு பொருளது.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
மனவலிமை இல்லாதவன், தவவேடத்தில் மறைந்து கொண்டு தவத்திற்குப் புறம்பானவற்றைச் செய்தல், வேட்டுவன் புதரிலே மறைந்து கொண்டு, பறவைகளை பிணித்தது போன்றதாகும்.
6 சாலமன் பாப்பையா
மேலான நிலையில் இருந்தும் கீழான செயல்களைச் செய்வது, வேட்டை ஆடுபவர் புதருக்குப் பின் மறைந்து நின்று பறவைகளைப் பிடிப்பது போலாம்.
7 கலைஞர் மு.கருணாநிதி
புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடிப்பதற்கும், தவக்கோலத்தில் இருப்பவர்கள் தகாத செயல்களில் ஈ.டுபடுவதற்கும் வேறுபாடு இல்லை.
8 சிவயோகி சிவக்குமார்
தவம் செய்பவர் போல் தன் உண்மை நிலையை மறைத்து தீமைகளை செய்வது புதரில் மறைந்து வேடன் பறவையை பிடிப்பது போன்றது.
More Kurals from கூடாவொழுக்கம்
அதிகாரம் 28: Kurals 271 - 280
Related Topics
Because you're reading about Avoiding Hypocrisy