Kural 202

தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

theeyavai theeya payaththalaal theeyavai
theeyinum anjap padum.

🌐 English Translation

English Couplet

Since evils new from evils ever grow,
Evil than fire works out more dreaded woe.

Explanation

Because evil produces evil, therefore should evil be feared more than fire.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.

2 மணக்குடவர்

தீத்தொழிலானவை தமக்குத் தீமை பயத்தலானே, அத்தொழில்கள் தொடிற் சுடுமென்று தீக்கு அஞ்சுதலினும் மிக அஞ்சப்படும்.

3 பரிமேலழகர்

தீயவை தீய பயத்தலான் - தனக்கு இன்பம் பயத்தலைக் கருதிச் செய்யும் தீவினைகள், பின் அஃது ஒழித்துத் துன்பமே பயத்தலான், தீயவை தீயினும் அஞ்சப்படும்- அத்தன்மையாகிய தீவினைகள் ஒருவனால் தீயினும் அஞ்சப்படும். (பிறிதொரு காலத்தும், பிறிதொரு தேயத்தும், பிறிதோர் உடம்பினும் சென்று சுடுதல் தீக்கு இன்மையின் , தீயினும் அஞ்சப்படுவதாயிற்று.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

தீய தீயவே பயத்தலால்-ஒருவன் தனக்கின்பங் கருதிச் செய்யும் தீவினைகள் இம்மையிலும் மறுமையிலும் துன்பங்களையே தருதலால்; தீயவை தீயினும் அஞ்சப்படும்-அத்தீவினைகள் தீயினும் மிகுதியாக அஞ்சப்படத்தக்கனவாம். தீயானது தொட்டவரைச் சுடினும் எரிப்பினும், சமைத்தலும் குளிர் போக்கலும் நோய் நீக்கலும் கொடுவிலங்கு விரட்டலுமாகிய நன்மைகளையுஞ் செய்தலாலும்; தீவினையானது செய்த காலத்தில் மட்டுமன்றிப் பின்பு வேறொரு காலத்திலும் வேறொரிடத்திலும் வேறோ ருடம்பிலுஞ் சென்று சுடுதலாலும், எவ்வகை நன்மையுஞ் செய்யாமையாலும்; 'தீயவை தீயினும் அஞ்சப்படும்' என்றார். தீவினை நன்மை செய்யாமை பற்றியே 'தீயவே' என்னும் பாடம் இங்குக் கொள்ளப்பட்டது.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

தீச் செயல்கள் தீமையினையே கொடுப்பதால் தீச் செயல்கள் தீயினைவிடக் கொடுமையென்று அஞ்சப் படும்.

6 சாலமன் பாப்பையா

நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.

7 கலைஞர் மு.கருணாநிதி

தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்.

8 சிவயோகி சிவக்குமார்

கெடுதல் கெடுதலை உண்டாக்குவதால் கெடுதல் நெருப்பை விட அஞ்சப்படும்.(குறிப்பு;- நெருப்பு மேலும் நெருப்பை உண்டாக்க வல்லது)

More Kurals from தீவினையச்சம்

அதிகாரம் 21: Kurals 201 - 210

Related Topics

Because you're reading about Fear of Sin

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature