தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாந் தூது.
Transliteration
thokachchollith thoovaadha neekki nakachcholli
nandri payappadhaanh thoodhu.
🌐 English Translation
English Couplet
In terms concise, avoiding wrathful speech, who utters pleasant word,
An envoy he who gains advantage for his lord.
Explanation
He is an ambassador who (in the presence of foreign rulers) speaks briefly, avoids harshness, talks so as to make them smile, and thus brings good (to his own sovereign).
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
பலவற்றைத் தொகுத்து சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன்.
2 மணக்குடவர்
சுருங்கச்சொல்லி, விரும்பாத சொற்களை நீக்கி, மகிழுமாறு சொல்லித் தன்னரசனுக்கு நன்மையைத் தருமவன் தூதனாவான். இது சொல்லுமாறு கூறிற்று.
3 பரிமேலழகர்
தொகச் சொல்லி - வேற்றரசர்க்குப் பல காரியங்களைச் சொல்லும்வழிக் காரணவகையால் தொகுத்துச் சொல்லியும்; தூவாத நீக்கி நகச் சொல்லி - இன்னாத காரியங்களைச் சொல்லும்வழி வெய்ய சொற்களை நீக்கி இனிய சொற்களான் மனமகிழச் சொல்லியும்; நன்றி பயப்பது தூதுஆம் - தன்னரசனுக்கு நன்மையைப் பயப்பவனே தூதனாவான். (பல காரியங்கட்கு உடம்படாதார் பரம்பரையான் அவற்றிற்குக் காரணமாயது ஒன்றைச் சொல்ல அதனால் அவை விளையுமாறு உய்த்துணர அருமையானும் சுருக்கத்தானும் உடம்படுவர், இன்னாதவற்றிற்கு உடம்படாதார் தம் மனம் மகிழச் சொல்ல, அவ்வின்னாமை காணாது உடம்படுவராதலின், அவ்விருவாற்றானும் தன் காரியம் தவறாமல் முடிக்கவல்லான் என்பதாம். எண்ணும்மைகள், விகாரத்தால் தொக்கன.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
தொகச் சொல்லி-வேற்றரசரிடம் பல செய்திகளைச் சொல்லவேண்டியிருக்கும்; போது மூலவகையாலும் ஒப்புமை வகையாலும் சுருக்கவகையாலும் தொகுத்துச் சொல்லியும் தூவாத நீக்கி நகச்சொல்லி-வெறுப்பான செய்திகளைச் சொல்லும்போது கடுஞ் சொற்களை நீக்கி இனிய சொற்களால் மனமகிழச் சொல்லியும்; நன்றி பயப்பது தூது ஆம்-தன் அரசனுக்கு நன்மை விளைப்பவனே நல்ல தூதனாவன். பல செய்திகளை ஒவ்வொன்றாக வேறுபடச்சொல்லின், அவற்றின் பன்மைபற்றியும் நெடுநேரங் கேட்குஞ் சலிப்புப் பற்றியும் அவற்றிற்கு இசையார். ஆயின், அவற்றைத்தொகுத்து ஒரே செய்தியாய்ச்சொல்லின் சுருக்கம்பற்றியும் விளைவறியாதும் இசைவர் என்பதாம். வேற்றரசன் மகளைத் தன்னரசனுக்குப் பெண்கேட்பதும், வேற்று நாட்டில் தன்னாட்டு வணிகக்குழும்பு ஒன்று தங்கி வணிகஞ் செய்ய இடங்கேட்பதும், போன்றவை மூலவகையில் தொகுத்துக் கூறலுக்கும்; சாலைகள் அமைத்தல், கால்வாய்கள் வெட்டுதல், சுருங்கைகள் குடைதல் முதலியவற்றைப் போக்குவரத்து வாயிலமைப்பு என்று குறிப்பது, ஒப்புமை வகையில் தொகுத்துக் கூறலுக்கும்; கோமுட்டி ஒருவன் தனக்குத் தெய்வங்கொடுத்த ஒரே ஈவைக் கேட்கும் போது, "என் கொட்பேரன் எழுநிலை மாடத்திலிருந்து பொற் கலத்திற் பாற்சோறுண்பதை நான் பார்க்க வேண்டும்." என்று சொன்னதாகக் கதை கூறுவது போன்றது. சுருக்க வகையில் தொகுத்துக் கூறலுக்கும்; எடுத்துக்காட்டாம். இன்சொற்குப் பெரும்பாலார் வயப்படுதல் பற்றியே அது நால்வகை ஆம்புடைகளுள் ஒன்றாகக் கொள்ளப்பட்டது. 'ஆம்' பிரித்துக் கூட்டப்பட்டது.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
வேற்றரசரிடம் சொல்லும்போது தொகுத்துச் சொல்லியும், வெம்மையான சொற்களை நீக்கி இனிய சொற்களால் மனம் மகிழச் சொல்லியும் தன் அரசனுக்கு நன்மை பயப்பவனே தூதனாவான்.
6 சாலமன் பாப்பையா
அடுத்த அரசிடம் சொல்லவேண்டியவற்றைத் தொகுத்துச் சொல்லியும், வெறுப்பு ஊட்டக் கூடியவற்றை விலக்கியும், இனிய சொற்களால் மனம் மகிழக் கூறியும், தம் சொந்த நாட்டிற்கு நன்மையைத் தேடி தரவேண்டியது தூதரின் பண்பாகும்.
7 கலைஞர் மு.கருணாநிதி
சினத்தைத் தூண்டாமல் மகிழத்தக்க அளவுக்குச் செய்திகளைத் தொகுத்தும், தேவையற்ற செய்திகளை ஒதுக்கியும், நல்ல பயனளிக்கும் விதமாகச் சொல்லுவதே சிறந்த தூதருக்கு அழகாகும்.
8 சிவயோகி சிவக்குமார்
தொகுத்துச் சொல்லித் தேவையற்றதை நீக்கி இன்புறும்படி எடுத்துரைத்து நன்றி பாரட்டும்படி நன்மை தரவல்லதாக அமைவதே தூது.
More Kurals from தூது
அதிகாரம் 69: Kurals 681 - 690