தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குரவு என்னும் நசை.
Transliteration
tholvaravum thoalum kedukkum thokaiyaaka
nalkuravu ennum nasai.
🌐 English Translation
English Couplet
Importunate desire, which poverty men name,
Destroys both old descent and goodly fame.
Explanation
Hankering poverty destroys at once the greatness of (one's) ancient descent and (the dignity of one's) speech.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப் பற்றினால், அவனுடைய பழைமையானக் குடிப் பண்பையும் புகழையும் ஒரு சேரக் கெடுக்கும்.
2 மணக்குடவர்
தொன்றுதொட்டு வருகின்ற குடிப்பிறப்பினையும் வடிவழகினையும் ஒருங்கு கெடுக்கும்; நல்குரவென்று சொல்லப் படுகின்ற ஆசைப்பாடு. நல்குரவு ஆசையைப் பண்ணுதலினால் ஆசையாயிற்று. தொல்- ஆகுபெயர். இது குலத்தினையும் அழகினையும் கெடுக்குமென்றது.
3 பரிமேலழகர்
நல்குரவு என்னும் நசை - நல்குரவு என்று சொல்லப்படும் ஆசை; தொல் வரவும் தோலும் தொகையாகக் கெடுக்கும் - தன்னால் பற்றப்பட்டாருடைய பழைய குடிவரவினையும் அதற்கு ஏற்ற சொல்லினையும் ஒருங்கே கெடுக்கும். (நசையில் வழி நல்குரவும் இல்லையாகலின், நல்குரவையே நசையாக்கி, அஃது அக்குடியின் தொல்லோர்க்கு இல்லாத இழிதொழில்களையும் இளிவந்த சொற்களையும் உளவாக்கலான், அவ்விரண்டனையும் ஒருங்கு கெடுக்கும் என்றார். 'குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்' (மணி.11-76) என்றார் பிறரும். தோலாவது 'இழுமென் மொழியால் விழுமியது நுவறல்' (தொல். பொருள். செய்யுள் .239) என்றார் தொல்காப்பியனாரும். இதற்கு 'உடம்பு' என்று உரைப்பாரும் உளர். அஃது அதற்குப் பெயராயினும் உடம்பு கெடுக்கும் என்றற்கு ஓர் பொருட்சிறப்பு இல்லாமை அறிக.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
நல்குரவு என்னும் நசை- வறுமையென்று சொல்லப்படும் ஆசை; தொல்வரவும் தோலும் தொகையாகக் கெடுக்கும் தன்னைக் கொண்டவனுடைய பழைமையான குடிப்பண்பையும் அக்குடிப்புகழையும் ஒருங்கே கெடுக்கும். வறுமையினால் பல பொருள்கள் மேலும் ஆசையுண்டாவதானாலும், அவ்வாசை பல இழி தொழில்களைச் செய்யத் தூண்டுதலாலும், நல்குரவை நசையாக்கி அந்நசை தொல்வரவையுந் தோலையுங் கெடுக்குமென்றார். தோலைப் பரிமேலழகர் பழைய குடிவரவிற் கேற்ற சொல் என்றார். தோல் என்னும் சொல்லை. "இழுமென் மொழியான் விழுமியது நுவலினும் பரந்த மொழியான் அடிநிமிர்ந் தொழுகினும் தோலென மொழிப தொன்மொழிப் புலவர்" என்னும் தொல்காப்பிய நூற்பா (பொருள்,339) ஒருவகை வனப்பு என்னும் பனுவலின் பெயராகக் குறித்தலால், ஒருவரின் பொதுவகையான சொற்களைக் குறிக்குமாறு அதை ஆள்வது அத்துணைப் பொருத்தமாகத் தோன்றவில்லை. மேலும், அடுத்த குறள் இளிவந்தசொல்லைப் பற்றிக் கூறுதலால், அதன்கண் கூறியது கூறல் என்னும் குற்றமுந் தங்கும். ஆகவே, ஆசிரியர் குறித்த பொருள் தெளிவாகவுந் திட்பமாகவுந் தெரியாதபோது, புகழ் என்னும் பொருள்கொள்வதே பொருத்தமாம். மணக்குடவ பரிப்பெருமாளர் வடிவழகு என்னும் பொருள் கொண்டனர். பரிதியார் உடம்பு என்று கொண்டார். காலிங்கர் வலி என்றார். ’’குடிப்பிறப்பழிக்கும் விழுப்பங் கொல்லும்’’ என்னும் மணிமேகலைத் தொடர் (11:76) குடிப் பண்பும் புகழும் என்று கொள்ளவே இடந்தரும்.
5 சாலமன் பாப்பையா
இல்லாமை என்று சொல்லப்படும் மன ஆசை எவரிடம் இருக்கிறதோ, அவரின் பழம் குடும்பப் பெருமையையும் சிறந்த பாராட்டுக்களையும் அது மொத்தமாக அழித்து விடும்.
6 கலைஞர் மு.கருணாநிதி
ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும்.
7 சிவயோகி சிவக்குமார்
சேர்த்து வைத்தப் பொருளும் திடமான ஆற்றலும் அழியும் இல்லாமை எற்படுத்தும் நல்குரவு என்ற நசை மொத்தமாக வந்தால்.
8 புலியூர்க் கேசிகன்
வறுமை எனப்படும் கேடானது, ஒருவனுடைய பழைய குடும்பச் செல்வத்தையும், அதன்மேல் அக்குடும்பத்திற்கு உண்டான பெரும்புகழையும் கெடுத்துவிடும்.
More Kurals from நல்குரவு
அதிகாரம் 105: Kurals 1041 - 1050
Related Topics
Because you're reading about Poverty