Kural 688

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் வாய்மை வழியுரைப்பான் பண்பு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

thooimai thuNaimai thuNivudaimai immoondrin
vaaimai vazhiyuraippaan paNpu.

🌐 English Translation

English Couplet

Integrity, resources, soul determined, truthfulness.
Who rightly speaks his message must these marks possess.

Explanation

The qualifications of him who faithfully delivers his (sovereign's) message are purity, the support (of foreign ministers), and boldness, with truthfulness in addition to the (aforesaid) three.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.

2 மணக்குடவர்

தூய்மையுடைமையும், சுற்றமுடைமையும், ஒரு பொருளை யாராய்ந்து துணிதலுடைமையும், இம்மூன்றின்கண்ணும் மெய்யுடைமையும் தூதற்கு இயல்பாம். தூய்மை- மெய்யும் மனமும் தூயனாதல்.

3 பரிமேலழகர்

வழி உரைப்பான் பண்பு - தன் அரசன் வார்த்தையை அவன் சொல்லியவாறே வேற்றரசர்க்குச் சென்று சொல்வானது இலக்கணமாவன; தூய்மை - பொருள் காமங்களால் தூயனாதலும்; துணைமை - தமக்கு அவரமைச்சர் துணையாந் தன்மையும்; துணிவுடைமை - துணிதலுடைமையும்; இம்மூன்றன் வாய்மை - இம்மூன்றோடு கூடிய மெய்ம்மையும் என இவை. (பொருள் காமங்கள் பற்றி வேறுபடக் கூறாமைப் பொருட்டுத் தூய்மையும், தன் அரசனுக்கு உயர்ச்சி கூறிய வழி 'எம்மனோர்க்கு அஃது இயல்பு' எனக்கூறி, அவர் வெகுளி நீக்குதற் பொருட்டுத் துணைமையும், 'இது சொல்லின் இவர் ஏதஞ்செய்வர்' என்று ஒழியாமைப் பொருட்டுத் துணிவுடைமையும் , யாவரானும் தேறப்படுதற் பொருட்டு மெய்ம்மையும் வேண்டப்பட்டன. 'இன'¢ ஒடுவின் பொருட்கண் வந்தது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

தூய்மை-மண் பெண் பொன் என்னும் மூவகை யாசையுமின்றித் தூயவனாயிருந்தாலும்; துணைமை-வேற்றரசரின் அமைச்சரைத் துணையாகவுடைமையும்; துணிவுடைமை- சொல்ல வேண்டிய செய்தியை அஞ்சாது சொல்லும் திடாரிக்கமும்; இம்மூன்றின் வாய்மையும்-இம்மூன்றொடு கூடிய மெய்ம்மையும்; வழி உரைப்பான் பண்பு-தன் அரசன் சொல்லி விடுத்த செய்தியை அவன் சொன்னவாறே வேற்றரசரிடம் சென்று கூறும் தூதனுக்கு இருக்க வேண்டிய தகுதிகளாம். மூவகை யாசைபற்றிச் செய்தியை வேறுபடக் கூறாமைப்பொருட்டுத் தூய்மையும், வேற்றரசன் சினத்தைத் தடுப்பதற்கும் தன் வினைக்குச் சார்பாயிருத்தற்கும் துணைமையும், வெறுக்கத்தக்க செய்தியிருப்பினும் விடாமற் சொல்லுதற் பொருட்டுத் துணிவும், எல்லாராலும் நம்பப்படும் பொருட்டு மெய்ம்மையும், வேண்டுமென்றார். 'இன்' இங்கு 'ஒடு'ப்பொருளது. இனி, 'இன்'னைச்சாரியையாகக் கொண்டு ஒடுவுருபு தொக்கதெனினுமாம்.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

தன் அரசன் சொன்னவற்றை வேற்றரசரிடம் கொண்டு சென்று கூறும் தூதுவனின் இலக்கணம் என்னவென்றால், மனம் செயல் இவற்றில் தூய்மையாதலும், அவரமைச்சர் தனக்குத் தக்க துணையாம் தன்மையும் துணிவுடைமையும் ஆகிய இம்மூன்றோடு கூடிய மெய்ம்மையும் ஆகும்.

6 சாலமன் பாப்பையா

பணத்தின் மீதும் அயல் பெண்கள் மீதும் ஆசை இல்லாமல் இருக்கும் நேர்மை, அடுத்த அரசின் அமைச்சர்களின் துணை, நல்லனவே எண்ணிச் செய்யும் துணிவு இம் மூன்றையும் உண்மையாகவே பெற்றிருப்பதே கூறியது கூறும் தூதரின் பண்பு.

7 கலைஞர் மு.கருணாநிதி

துணிவு, துணை, தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத் தேவையானவைகளாகும்.

8 சிவயோகி சிவக்குமார்

தேவையற்றதை நாடாத தூய்மை, நன்மைக்கு துணையாதல், அச்சமற்ற துணிவு இம்மூன்றின் உண்மைத் தன்மையுடன் இருப்பதே தூதுரைப்பவர் பண்பு.

More Kurals from தூது

அதிகாரம் 69: Kurals 681 - 690

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature