தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும்.
Transliteration
thotippuzhudhi kaqsaa uNakkin pitiththeruvum
vaeNtaadhu saalap padum.
🌐 English Translation
English Couplet
Reduce your soil to that dry state, When ounce is quarter-ounce's weight;
Without one handful of manure, Abundant crops you thus secure.
Explanation
If the land is dried so as to reduce one ounce of earth to a quarter, it will grow plentifully even without a handful of manure.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடவேண்டாமல் அந் நிலத்தில் பயிர் செலுத்தி செழித்து விளையும்.
2 மணக்குடவர்
ஒரு பலப்புழுதியைக் கஃசாக உணக்குவனாயின், ஒரு கையாற் பிடித்தது எருவும் இடவேண்டாமல் அமைந்து விளையும். மேற்கூறிய உழவு செய்யுந்திறன் கூறுவார் முற்படப் புழுதியுணக்க வேண்டுமென்றார்.
3 பரிமேலழகர்
தொடிப்புழுதி கஃசா உணக்கின் - ஒரு நிலத்தினை உழுதவன் ஒரு பலப் புழுதி கஃசாம் வண்ணம் அதனைக் காய விடுவானாயின்; பிடித்து எருவும் வேண்டாது சாலப்படும் - அதன்கண் செய்த பயிர் ஒரு பிடியின்கண் அடங்கிய எருவும் இடவேண்டாமல் பணைத்து விளையும். (பிடித்து - பிடியின்கண்ணது. 'பிடித்த' என்பதன் விகாரம் என்பாரும் உளர். 'வேண்டாமல்', 'சான்று' என்பன திரிந்து நின்றன.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
தொடிப்புழுதி கஃசா உணக்கின்- ஒரு நிலத்தை யுழுதவன் ஒருபலப் புழுதி காற்பலம் ஆகும் வண்ணம் அவ்வுழவடிப் புழுதியைக் காயவிடுவானாயின்; பிடித்து எருவும் வேண்டாது சாலப்படும் - அந்நிலத்திற் செய்த பயிர் கைப்பிடியெருவுந் தேவையின்றிச் செழித்து வளரும். பிடித்து ஒருபிடிக்குள் அடங்கியது. உம்மை இழிவு சிறப்பு. 'புழுதி' என்றமையால் உழுதபின் கட்டியடித்தலும் பரம்படித்தலும் பெறப்படும்.
5 சாலமன் பாப்பையா
உழுத மண்ணை, ஏறத்தாழ 35 கிராம் புழுதி, 8.75 கிராம் புழுதி ஆகும்படி காய விட்டுப் பிறகு பயிர் செய்தால் ஒரு கைப்பிடி அளவு எருவும் இடாமலேயே கூட அந்தப் பயிர் அதிகம் விளையும்.
6 கலைஞர் மு.கருணாநிதி
ஒருபலம் புழுதி, காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும்.
7 சிவயோகி சிவக்குமார்
ஒரு பலம் புழுதி கசக்கி ஒன்றும் இல்லாதபடி உலர்த்த ஓரு பிடி எருவும் தேவையின்றி மண் பதப்பட்டு சிறப்புறும்.
8 புலியூர்க் கேசிகன்
ஒரு பலப் புழுதியானது காற்பலமாக ஆகும்படி உழுது காய விடுவானானால், அதனிடம் செய்த பயிர், ஒரு பிடி எருவு இடுதலையும் வேண்டாமலே நன்றாக விளையும்.
More Kurals from உழவு
அதிகாரம் 104: Kurals 1031 - 1040
Related Topics
Because you're reading about Agriculture