Kural 557

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

thuLiyinmai GnaalaththiRku etratrae vaendhan
aLiyinmai vaazhum uyirkku.

🌐 English Translation

English Couplet

As lack of rain to thirsty lands beneath,
Is lack of grace in kings to all that breathe.

Explanation

As is the world without rain, so live a people whose king is without kindness.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ, அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.

2 மணக்குடவர்

உலகத்திற் பல்லுயிர்க்கும் மழையில்லையானால் வருந்துன்பம் எத்தன்மைத்தாகின்றது; அத்தன்மைத்து, அரசன் அருளிலனாதால் அவன் கீழ் வாழும் மக்கட்கு. இஃது அருள் செய்யாமையால் வருங் குற்றங் கூறிற்று.

3 பரிமேலழகர்

'துளி' இன்மை ஞாலத்திற்கு எற்று - மழை இல்லாமை வையத்து வாழும் உயிர்கட்கு எவ்வகைத் துன்பம் பயக்கும், அற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு - அவ்வகைத் துன்பம் பயக்கும் அரசன் தண்ணளியில்லாமை அவன் நாட்டு வாழும் குடிகட்கு. (சிறப்புப்பற்றி 'துளி' என்பது மழைமேல் நின்றது. 'உயிர்' என்பது குடிகள்மேல் நின்றது. மேல் 'வான் நோக்கி வாழும்' என்றதனை எதிர்மறை முகத்தால் கூறியவாறு.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

துளியின்மை ஞாலத்திற்கு எற்று - மழையில்லாமை உலகத்திலுள்ள உயிர்கட்கு விளைக்கும் துன்பம் எத்தகையதோ ; அற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு - அத்தகையதே அரசனின் அருளின்மை அவன் நாட்டு வாழும் குடிகட்கு விளைக்குந் துன்பமும் ஆகும். "வானோக்கி வாழு முலகெல்லாம்" என்னுங் குறள் (542) இங்கு எதிர்மறை முகத்தால் ஒரு புது வலிமை பெறக் கூறப்பட்டது . இலை யென்பது சிறப்பாக வாழையிலையைக் குறித்தல் போல், துளி யென்பது இங்கு மழைத்துளியைக் குறித்து மழையென்னும் பொருளில் ஆகுபெயராக நின்றது . உயிர் என்றது இங்குக் குடிகளை. 'ஞாலம்' ஆகுபெயர் . என்னது - எற்று . (என் + து ) . அன்னது - அற்று (அன் + து ) . ஏகாரம் தேற்றம்.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

மழை இல்லாமையானது உலகில் வாழும் உயிர்களுக்கு எவ்வகைத் துன்பத்தினை உண்டாக்குமோ, அவ்வகைத் துன்பம் அருளில்லாத வேந்தன் நாட்டில் வாழும் மக்களுக்கு உண்டாகும்.

6 சாலமன் பாப்பையா

மழை இல்லாது போனால் எத்தகைய துயரத்தை மக்கள் அடைவார்களோ, அத்தகைய துயரத்தை, நேர்மையில்லாத ஆட்சியின் கீழும் அடைவார்கள்.

7 கலைஞர் மு.கருணாநிதி

மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள்.

8 சிவயோகி சிவக்குமார்

மழைத்துளி இல்லாது போனால் இவ்வுலகிற்கு ஏற்றது இல்லை. அதைப் போலவே ஆட்சியர் கொடுக்கும் தன்மையற்று இருப்பது வாழும் உயிர்க்கு ஏற்றது இல்லை.

More Kurals from கொடுங்கோன்மை

அதிகாரம் 56: Kurals 551 - 560

Related Topics

Because you're reading about Cruel Rule

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature