திருக்குறள் - 1318     அதிகாரம்: 
| Adhikaram: pulavi nunukkam

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.

குறள் 1318 - திருவள்ளுவர் - ThiruValluvar

"thummuch cheruppa azhudhaal numar ullal" Thirukkural 1318 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அவளுடைய ஊடலுக்கு அஞ்சி யான் தும்மலை அடக்கிக் கொள்ள உம்மவர் உம்மை நினைப்பதை எமக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ என்று அழுதாள்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தும்மல் தோற்ற அதனை யடக்கினேன். அதற்காக நுமர் உள்ளினமையை எமக்கு மறைக்கின்றீரோ வென்று சொல்லி அழுதாள். இது தும்மாதொழியினும் குற்றமென்று கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) தும்முச் செறுப்ப - எனக்குத் தும்மல் தோன்றியவழி, யார் உள்ளித் தும்மினீர்? என்று புலத்தலை அஞ்சி, அதனையான் அடக்கினேன், அங்ஙனம் அடக்கவும்; நுமர் உள்ளல் எம்மை மறைத்திரோ என்று அழுதாள் - நுமர் நும்மை நினைத்தலை எம்மை மறைக்கல் உற்றீரோ என்று சொல்லிப் புலந்தழுதாள். ('தும்மு' என்பது முதனிலைத் தொழிற்பெயர். செறுப்ப என்புழி இறந்தது தழீஇய எச்சவும்மை விகாரத்தால் தொக்கது. எம்மை என்பது 'நும்மோடு யாதுமியைபில்லாத எம்மை' என்பதுபட நின்ற இசையெச்சம். இதனை வடநூலார் 'காகு' என்ப. 'தும்மினும் குற்றம், ஒழியினும் குற்றமாயக்கால் செயற்பாலது யாது'? என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவுமது) தும்முச் செறுப்ப - எனக்குத் தும்மல் தோன்றியபோது, என்காதலி யாருள்ளித் தும்மினீரென்று புலத்தலஞ்சி, அதனையடக்க, நுமர் உள்ளல் எம்மை மறைத்திரோ என்று அழுதாள் - நும் காதலியார் நும்மை நினைத்தலை எனக்கு மறைக்கின்றீரோ என்று சொல்லி யழுதாள். தும்மினுங் குற்றம், தும்மலை யடக்கினுங் குற்றமாயின் என் செய்வது என்பதாம். ' தும்மு ' முதனிலைத் தொழிற்பெயர். பரத்தையரை 'நுமர் ' என்றதினால், 'எம்மை ' யென்பது நும்மோடியைபில்லாத எம்மை யென்பதுபட நின்றது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அடுத்தமுறை தும்மல் வர அதனை வெளிப்படுத்தாமல் நான் அடக்கினேன்; அதைப் பார்த்து யாரோ உமக்கு வேண்டியவர்கள் உம்மை நினைப்பதை நான் அறிந்துவிடக்கூடாது என்று எனக்கு மறைக்கிறீரோ, என்று ஊடி அழுதாள்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஊடல் கொள்வாளோ எனப் பயந்து நான் தும்மலை அடக்கிக் கொள்வதைப் பார்த்த அவள் ஓ உமக்கு நெருங்கியவர் உம்மை நினைப்பதை நான் அறியாதபடி மறைக்கிறீரோ? எனக் கேட்டு அழுதாள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


தும்மலை தடுத்து நிறுத்த அழுதாள் உங்கள் எண்ணத்தை எனக்கு மறைக்கின்றீர் என்று.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


அவள் பிணங்குவாள் என்று பயந்து நான் எழுந்த தும்மலையும், அடக்கினோனாக, ‘உம்மவர் நினைப்பதை எமக்குத் தெரியாதபடி மறைத்தீரோ?’ என்று அவள் அழுதாள்.

Thirukkural in English - English Couplet:


And so next time I checked my sneeze; She forthwith wept and cried,
(That woman difficult to please), 'Your thoughts from me you hide'.

ThirukKural English Meaning - Couplet -Translation:


When I suppressed my sneezing, she wept saying, "I suppose you (did so) to hide from me your own people's remembrance of you".

ThiruKural Transliteration:


thummuch cheruppa azhudhaal numar-ullal
emmai maraiththiroa endru.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore