துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று.
Transliteration
thuniyum pulaviyum illaayin kaamam
kaniyum karukkaayum atru.
🌐 English Translation
English Couplet
Love without hatred is ripened fruit;
Without some lesser strife, fruit immature.
Explanation
Sexual pleasure, without prolonged and short-lived dislike, is like too ripe, and unripe fruit.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
பெரும் பிணக்கும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும்.
2 மணக்குடவர்
உணராது நீட்டிக்கின்ற துனியும் உணர மீள்கின்ற புலவியும் இல்லையாயின் காமம் அழுகிய பழம்போலப் புளிக்கும்: காய்போலத் துவர்க்கும் ஆதலால். இஃது உணர்தற்கு நல்லது உளதென்று தலைமகள் கூறியது.
3 பரிமேலழகர்
(இதுவும் அது.) துனியும் புலவியும் இல்லாயின் - முதிர்ந்த கலாம் ஆகிய துனியும், இளைய கலாம் ஆகிய புலவியும் இல்லையாயின்; காமம் கனியும் கருக்காயும் அற்று - காமம் செவ்வி முதிர்ந்த பழமும் இளங்காயும் போலும். (மிகமுதிர்ந்திறும் எல்லைத்தாய கனி நுகர்வார்க்கு மிகவும் இனிமை செய்தலின் துனியில்லையாயின், 'கனியற்று' என்றும், கட்டிளமைத்தாய காய் நுகரும் செவ்வித் தன்றாகலின் புலவியில்லையாயின் 'கருக்காயற்று' என்றும் கூறினான். இவ்விரண்டும் வேண்டும் என்று வியந்து கூறியவாறு.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
(இதுவுமது) துனியும் புலவியும் இல்லாயின்-முதிர்ந்த சடைவாகிய துனியும் அளவான சடைவாகிய புலவியும் இல்லாவிடின் ; காமம் கனியும் கருக்காயும் அற்று-காம வின்பம் முறையே நன்றாகப் பழுத்த பழமும் பழுக்காத கன்னற் காயும் போல்வதாம் . காம வின்பம் ஊடல் , புலவி , துனி என்னும் மூவகைச் சடைவு நிலையிலும் முறையே கன்னற்காய் , பழம், அளியல் என்னும மூவகைப் பதங் கொள்ளும் பழுக்காத கன்னற்காய்ப் பதமும் மிகப் பழுத்த அளியற் பதமும் சுவை யின்றி வலுத்தும் சுவை கெட்டு அளிந்தும் இருக்குமாதலின் ,இடை நின்ற கனிப் பதமே மென்மையும் இனிமையுங் கொண்டு இன்பந் தருவதாம் . ஆதலால் , அளவாக வுப்பமைந்தது போன்ற புலவி நிலையே இனிதான கனி போல் இன்பந் தருவதற் கேற்ற தென்பதாம் .
5 சாலமன் பாப்பையா
வளர்ந்த ஊடலாகிய துனியும், இளம் ஊடலாகிய புலவியும் இல்லாது போய்விட்டால், காதல் நிறைந்த இல்லறம், முதிர்ந்த பழமும் இளங்காயும் போல் ஆகிவிடும்.
6 கலைஞர் மு.கருணாநிதி
பெரும்பிணக்கும், சிறுபிணக்கும் ஏற்பட்டு இன்பம் தரும் காதல் வாழ்க்கை அமையாவிட்டால் அது முற்றிப் பழுத்து அழுகிய பழம் போலவும், முற்றாத இளம் பிஞ்சைப் போலவும் பயனற்றதாகவே இருக்கும்.
7 சிவயோகி சிவக்குமார்
துன்பமும் சிறு பிணக்கும் இல்லாதகாமம் பழமும் காயும் இல்லாமல் வளமற்றதாகி விடும்.
8 புலியூர்க் கேசிகன்
பெரிய பிணக்கமும் சிறிதான பிணக்கமும் இல்லாமற் போனால், காமமானது, மிகக்கனிந்த கனியும், பழுக்காத கருக்காயும் போலப் பயனற்றது ஆகும்.
More Kurals from புலவி
அதிகாரம் 131: Kurals 1301 - 1310
Related Topics
Because you're reading about Lovers' Quarrel