"thunjungaal thoalmelar aaki vizhikkungaal" Thirukkural 1218 - Meaning in English & Tamil Vilakkam
- மு.வரதராசனார் உரை: Kural Vilakkam
- மணக்குடவர் உரை: Kural Vilakkam
- பரிமேலழகர் உரை: Kural Vilakkam
- ஞா.தேவநேயப் பாவாணர் உரை: Kural Vilakkam
- சாலமன் பாப்பையா உரை: Kural Vilakkam
- கலைஞர் மு.கருணாநிதி உரை: Kural Vilakkam
- சிவயோகி சிவக்குமார் உரை: Kural Vilakkam
- புலியூர்க் கேசிகன் Kural Vilakkam
- Thirukkural in English - English Couplet
மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil
தூங்கும்போது கனவில் வந்து என் தோள்மேல் உள்ளவராகி, விழி்த்தெழும்போது விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகிறார்.
மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil
காதலர் உறங்குங்காலத்துத் தோள்மேலராகி விழித்தகாலத்து விரைந்து மனத்தின்கண்ணே புகுவர். இஃது உறக்கம் நீங்கினால் யாண்டுப் போவரென்று நகைக் குறிப்பினாற் கூறிய தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil
(தான் ஆற்றுதற்பொருட்டுத் தலைமகனை இயற்பழித்தாட்கு இயற்பட மொழிந்தது.) துஞ்சுங்கால் தோள் மேலராகி - என் நெஞ்சு விடாது உறைகின்ற காதலர் யான் துஞ்சும் பொழுது வந்து என் தோள் மேலராய்; விழிக்குங்கால் விரைந்து நெஞ்சத்தர் ஆவர் - பின் விழிக்கும் பொழுது விரைந்து பழைய நெஞ்சின் கண்ணராவர். (கலவி விட்டு மறையும் கடுமைபற்றி 'விரைந்து' என்றாள். ஒருகாலும் என்னின் நீங்கி அறியாதாரை நீ நோவற்பாலை யல்லை என்பதாம்.).
ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil
(தானாற்றுதற் பொருட்டுத் தலைமகனை யியற்பழித்த தோழிக்கு. இயற்படமொழிந்தது.) துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி - என் உள்ளத்தில் இடைவிடா துறைகின்ற காதலர், யான் தூங்கும் பொழுது என் தோள்மேலமர்ந்திருந்து ; விழிக்குங்கால் விரைந்து நெஞ்சத்தர் ஆவர் - பின்பு விழிக்கும்போது விரைந்து பழையபடி என் உள்ளத்திற் புகுவர். நாள்தோறும் கனவில் வந்து கூடுபவரை நீங்கினாரென்று பழித்தல் தகாது என்பதாம். 'தோன்மேலராகி' இடக்கரடக்கல் விழிப்பின் திடுமைபற்றி 'விரைந்து' என்றாள்.
சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil
என் நெஞ்சில் எப்போதும் வாழும் என்னவர் நான் உறங்கும் போது என் தோளின் மேல் கிடக்கிறார். விழித்துக் கொள்ளும் போதோ வேகமாக என் நெஞ்சிற்குள் நுழைந்து கொள்கிறார்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil
தூக்கத்தில் கனவில் வந்து என் தோள் மீது சாய்ந்து இன்பம் தந்தவர், விழித்தபோது எங்கும் போய் விடவில்லை; என் நெஞ்சில் தாவி அமர்ந்து கொண்டார்.
சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil
உறங்கையில் உறவாடுபவராக இருப்பவர் விழித்தவுடன் நெஞ்சத்திலே நிறைந்து விடுகிறார் விரைந்து.
புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil
தூங்கும் போது கனவிலே என் தோள்மேலராகக் காதலர் வந்திருப்பார்; விழித்து எழும் போதோ, விரைவாக என் நெஞ்சில் உள்ளவராக ஆகின்றார்!
Thirukkural in English - English Couplet:
And when I sleep he holds my form embraced;
And when I wake to fill my heart makes haste!.
ThirukKural English Meaning - Couplet -Translation:
When I am asleep he rests on my shoulders, (but) when I awake he hastens into my soul.
ThiruKural Transliteration:
thunjungaal thoalmelar aaki vizhikkungaal
nenjaththar aavar viraindhu.