"thurandhaarkkum thuvvaa thavarkkum" Thirukkural 42 - Meaning in English & Tamil Vilakkam
- மு.வரதராசனார் உரை: Kural Vilakkam
- மணக்குடவர் உரை: Kural Vilakkam
- பரிமேலழகர் உரை: Kural Vilakkam
- ஞா. தேவநேயப் பாவாணர் உரை: Kural Vilakkam
- திருக்குறளார் வீ. முனிசாமி உரை: Kural Vilakkam
- சாலமன் பாப்பையா உரை: Kural Vilakkam
- கலைஞர் மு.கருணாநிதி உரை: Kural Vilakkam
- சிவயோகி சிவக்குமார் உரை: Kural Vilakkam
- புலியூர்க் கேசிகன் Kural Vilakkam
- Thirukkural in English - English Couplet
மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil
துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.
மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil
வருணத்தினையும் நாமத்தினையுந் துறந்தார்க்கும், துறவாது நல்குரவாளரா யுண்ணப் பெறாதார்க்கும், பிறராய் வந்து செத்தார்க்கும் இல்வாழ்வானென்று சொல்லப்படுமவன் துணை யாவான். (வறுமையாளர், கைவிடப்பட்டவர், திக்கற்றவர்). மேற்கூறிய மூவரும் வருணநாமங்களைத் துறவாமையாலீண்டுத் துறந்தாரென்று கூறினார். செத்தார்க் கிவன் செய்ய வேண்டிய புறங்காட்டுய்த்தல் முதலாயின. இது மேற்கூறியவர்க்கேயன்றி இவர்க்கும் துணையென்று கூறிற்று.
பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil
துறந்தார்க்கும்- களைகண் ஆனவரால் துறக்கப்பட்டார்க்கும்; துவ்வாதவர்க்கும் - நல்கூர்ந்தார்க்கும்; இறந்தார்க்கும்-ஒருவருமன்றித் தன்பால்வந்து இறந்தார்க்கும்; இல்வாழ்வான் என்பான் 'துணை'-இல்வாழ்வானென்று சொல்லப்படுவான் துணை (துறந்தார்க்குப் பாவம் ஒழிய அவர் களைகணாய் நின்று வேண்டுவன செய்தலானும், துவ்வாதவர்க்கு உணவு முதலிய கொடுத்தலானும், இறந்தார்க்கு நீர்க்கடன் முதலிய செய்து நல்லுலகின்கண் செலுத்தலானும், துணை என்றார். இவை இரண்டு பாட்டானும் இல்நிலை எல்லா உபகாரத்திற்கும் உரித்தாதல் கூறப்பட்டது.).
ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil
துறந்தார்க்கும்-உலகப்பற்றைத் துறந்தவர்க்கும்; துவ்வாதவர்க்கும்-உண்பதற்கில்லாத வறியர்க்கும்: இறந்தார்க்கும்-ஒருவருமின்றித் தன்னிடம் வந்து இறந்தார்க்கும்; இல்வாழ்வான் என்பான் துணை-இல்லறத்தான் என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவன் துணையாம். "உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூஉம் விட்டேமென் பார்க்கு நிலை". "இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர்". என்று ஆசிரியர் வேறிடத்துங் கூறுதல் காண்க. "துறந்தார் பொருமை" (22) "துறந்தாரின் தூய்மை" (159), "துறந்தார்க்குத் துப்புரவு "(263) , "துறந்தார் படிவத்தர்" (586) என வருமிடமெல்லாம், துறந்தார் என்னுஞ்சொல் செய்வினைப் பொருளே தருதலால், "களைகணானவராற்றுறக்கப் பட்டார்க்கும்" என்று பரிமேலழகர் ஈண்டு செயப்பாட்டுவினைப் பொருள் கூறுவது பொருந்தாது. முந்தின குறளுரையில் அவர் மூவகைப் போலித் துறவியரைப் பொருத்தியதினாலேயே இங்கு இவ்வாறுரைக்க நேர்ந்தது. களைகணானவரால் துறக்கப்பட்டவரும் துவ்வாதவருள் அடங்குவர். இறந்தார்க்குச் செய்யுந்துணை ஈமக்கடனும் இறுதிக் சடங்கும் தென்புலத்தார் படையலுமாம்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil
துறந்தவர்களுக்கும், வறுமையாளர்களுக்கும், யாருமின்றித் தன்னிடம் வந்து இறந்தவர்களுக்கும் இல்வாழ்வான் என்பவன் துணையாக இருக்கக் கடவன்.
சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil
மனைவியோடு வாழ்பவன்தான் துறவியர், வறுமைப்பட்டவர், இறந்து போனவர் என்பவர்க்கும் உதவுபவன்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil
பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும், பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்.
சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil
போதும் என்று நிறைவை அடைந்தவருக்கும் , நிறைவு அடையாதவருக்கும்,இறந்தவருக்கும் ,குடும்பத்தானே துணையாவான்.
புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil
துறவியர்க்கும், வறுமைப்பட்டோர்க்கும், தனக்குத் தொடர்புடைய இறந்தவர்கட்கும் இல்வாழ்வினனே துணையாவான்.
Thirukkural in English - English Couplet:
To anchorites, to indigent, to those who've passed away,
The man for household virtue famed is needful held and stay.
ThirukKural English Meaning - Couplet -Translation:
He will be said to flourish in domestic virtue who aids the forsaken, the poor, and the dead.
ThiruKural Transliteration:
thuRandhaarkkum thuvvaa thavarkkum iRandhaarkkum
ilvaazhvaan enpaan thuNai.