உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு.
Transliteration
udaimaiyuL inmai virundhoampal Ompaa
madamai matavaarkaN uNdu.
🌐 English Translation
English Couplet
To turn from guests is penury, though worldly goods abound;
'Tis senseless folly, only with the senseless found.
Explanation
That stupidity which excercises no hospitality is poverty in the midst of wealth It is the property of the stupid.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
9 scholars' interpretations
1 மு.வரதராசனார்
செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.
2 மணக்குடவர்
உடைமையின் கண்ணே யில்லாமைபோல, விருந்தினர்க்கு அளித்தலைப் போற்றாத பேதைமை, பேதைமையார் மாட்டேயுளதாம்.
3 பரிமேலழகர்
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை -உடைமைக் காலத்து இன்மையாவது விருந்தோம்பலை இகழும் பேதைமை; மடவார்கண் உண்டு - அஃது அறிந்தார் மாட்டு உளதாகாது; பேதையார் மாட்டே உளதாம். (உடைமை - பொருளுடையனாம் தன்மை. பொருளால் கொள்ளும் பயனை இழப்பித்து உடைமையை இன்மை ஆக்கலின், மடமையை இன்மையாக உபசரித்தார்.பேதைமையான் விருந்தோம்பலை இகழின் பொருள் நின்ற வழியும் அதனால் பயன் இல்லை என்பதாம். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பா வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.).
4 ஞா. தேவநேயப் பாவாணர்
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஒம்பா மடமை-செல்வக் காலத்து வறுமையாவது விருந்தோம்பலைப் புறக்கணிக்கும் பேதைமை; மடவார்கண் உண்டு-அது பேதையரிடத்திலேயே உள்ளது. செல்வத்தின் பயனை இழப்பித்து அதை வறுமையாக மாற்றுவதால், பேதமையை வறுமையாகச் சார்த்திக் கூறினார்.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
பொருள் பெற்றிருந்தும் வறுமை இருப்பது என்பது என்னவென்றால், விருந்தினரைப் போற்றாதிருக்கும் மடமையாகும். அத்தன்மை, அறிவில்லாதவர்களிடத்தில் காணப்படுவதாகும்.
6 சாலமன் பாப்பையா
செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும்.
7 கலைஞர் மு.கருணாநிதி
விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்.
8 சிவயோகி சிவக்குமார்
அடைந்தவைகளில் விருந்து உபசரிப்பதைபோல் இல்லை. சிறுபுத்தி உள்ளவர்களிடம் உபசரிக்காதா மடத்தனம் உண்டு.
9 புலியூர்க் கேசிகன்
பொருள் உடைமையுள்ளும் ‘இல்லாமை’ என்பது, விருந்தோம்பலைப் பேணாத மடமையே; அஃது அறிவற்றவரிடமே உளதாகும்.
More Kurals from விருந்தோம்பல்
அதிகாரம் 9: Kurals 81 - 90
Related Topics
Because you're reading about Hospitality