Kural 473

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

udaiththam valiyaRiyaar ookkaththin ookki
itaikkaN murindhaar palar.

🌐 English Translation

English Couplet

Ill-deeming of their proper powers, have many monarchs striven,
And midmost of unequal conflict fallen asunder riven.

Explanation

There are many who, ignorant of their (want of) power (to meet it), have haughtily set out to war, and broken down in the midst of it.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

தன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.

2 மணக்குடவர்

தம்முடைய வலியறியாது மனமிகுதியாலே வினை செய்யத் தொடங்கி அது முடிவதன்முன்னே கெட்டார் பலர். இது வலியறியாதார் கெடுவரென்றது.

3 பரிமேலழகர்

உடைத்தம் வலி அறியார் - கருத்தா ஆதலையுடைய தம் வலியின் அளவறியாதே, ஊக்கத்தின் ஊக்கி - மனஎழுச்சியால் தம்மின் வலியாரோடு வினை செய்தலைத் தொடங்கி, இடைக்கண் முரிந்தார் பலர் - அவர் அடர்த்தலான் அது செய்து முடிக்கப் பெறாது இடையே கெட்ட அரசர் உலகத்துப் பலர். ('உடைய' என்பது அவாய் நின்றமையின் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. மூவகை ஆற்றலுள்ளும் சிறப்புடைய அறிவு உடையார் சிலராதலின், 'முரிந்தார் பலர்' என்றார். அதனால் தம் வலியறிந்தே தொடங்குக என்பது எஞ்சி நின்றது.). மணக்குடவர் உரை:

4 ஞா.தேவநேயப் பாவாணர்

தம் உடை வலி அறியார் - தம்முடைய உண்மையான வலியளவைச் சரியாக அளந்தறியாது , ஊக்கத்தின் ஊக்கி - தம் மனவெழுச்சி மிகையால் தம்மினும் வலியாரொடு போர்செய்ய முயன்று ; இடைக்கண் முரிந்தார் பலர் - அவர் தாக்குதலைப்பொறுக்கும் ஆற்றலின்றி இடையே கெட்டுப்போன அரசர் உலகத்திற்பலராவர் . ஆறாம் வேற்றுமைச் சொல்லுருபாகவரும் உடைய என்னும் குறிப்புப் பெயரெச்சம் , உடை என்று குறுகி முன்பின்னாக முறை மாறிநின்றது . இனி , இடம் மாற்றாது உள்ளவாறே கொண்டு , (தாம்) உடையதம் என்று பொருள் கொள்ளினுமாம் . உடைய என்னும் குறிப்புப் பெயரெச்சம் ஒரு தொடர்ச் சொல்லின் நிலைமொழியாகவும் வரும் என்பதை , உடைய நம்பி . உடைய பிள்ளையார் , உடைய வரசு என்னும் வழக்கு நோக்கி யறிக . முரிந்தார் பலர் என்பது உலகத்தில் அறிவுடையார் சிலர் என்பதை உணர்த்தும் . முரிதல் என்னுஞ்சொல் முறிதல் என்னும் வடிவுங் கொள்ளும் .

5 திருக்குறளார் வீ. முனிசாமி

முதன்மையாக உடைய தனது வலிமையினை அளந்தறியாமல் மன எழுச்சியால் தம்மைவிட வலியாரோடு போர் செய்தலைத் தொடங்கி முடிக்கப் பெறாமல் இடையே கெட்ட அரசர் பலருண்டு.

6 சாலமன் பாப்பையா

தம் ஆற்றலை அறியாமல், ஒரு வேகத்தில் செயலைச் செய்யத் தொடங்கித் தொடரமுடியாமல் இடையே விட்டுக் கெட்டவர் பலர்.

7 கலைஞர் மு.கருணாநிதி

தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு.

8 சிவயோகி சிவக்குமார்

உடைமையாக கொண்ட வலிமையை சரியாக அறியாமல் ஆர்வமுடன் ஆரம்பித்து இடையிலேயே முடித்துக் கொண்டவர்கள் பலர்.

More Kurals from வலியறிதல்

அதிகாரம் 48: Kurals 471 - 480

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature