உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு.
Transliteration
udampotu uyiridai ennamaR Ranna
madandhaiyodu emmitai natpu.
🌐 English Translation
English Couplet
Between this maid and me the friendship kind
Is as the bonds that soul and body bind.
Explanation
The love between me and this damsel is like the union of body and soul.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
இம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.
2 மணக்குடவர்
உடம்போடு உயிரிடையுள்ள நட்பு எத்தன்மைத்து அத்தன்மைத்து, மடப்பத்தையுடையாளோடு எம்மிடையுள்ள நட்பு. நின்னிற் பிரியமாட்டே னென்றவாறு. இது தலைமகன் தனது காதல் மிகுதி கூறியது.
3 பரிமேலழகர்
(பிரிவு அச்சம் கூறியது.) உடம்பொடு உயிரிடை என்ன அன்ன - உடம்பொடு உயிரிடை உளவாய நட்புக்கள் எத்தன்மைய? அத்தன்மைய; மடந்தையொடு எம்மிடை நட்பு - இம்மடந்தையோடு எம்மிடை உளவாய நட்புக்கள். ('என்ன'? எனப் பன்மையாற் கூறியது, இரண்டும் தொன்றுதொட்டு வேற்றுமையின்றிக் கலந்து வருதல், இன்பதுன்பங்கள் ஒக்க அனுபவித்தல், இன்றியமையாமை என்றிவற்றை நோக்கி. தெய்வப் புணர்ச்சியாகலான், அதுபொழுது உணர்ச்சியிலள் ஆகியாள் பின் உடையளாமன்றே?ஆயவழி 'இவன் யாவன் கொல்' எனவும், 'என்கண் அன்புடையன்கொல்'? எனவும், 'இன்னும்இவனைத் தலைப்பெய்தல் கூடுங்கொல்'? எனவும் அவள்மனத்தின்கண் நிகழும், அந்நிகழ்வனவற்றைக் குறிப்பான் அறிந்து, அவை தீரக் கூறியவாறு. 'என்னை' என்று பாடம் ஓதுவாரும் உளர்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
( பிரிவச்சந் தவிர்த்தது. ) உடம்பொடு உயிர்இடை என்ன - உடம்போடு உயிருக்குள்ள தொடர்புகள் எத்தன்மையன ; அன்ன மடந்தை யொடு எம் இடை நட்பு - அத்தன்மையனவே இப்பெண்ணோடு எனக்குள்ள தொடர்புகளும் . தொடர்புகளாவன ; தொன்று தொட்டு வேற்றுமையின்றிக் கலந்து வருதல் , பிரிந்து கூடல் , இன்பத்துன்பங்கள் ஒக்க நுகர்தல் , ஒன்றை ( ஒருவரை ) விட்டு ஒன்று ( ஒருவர் ) இன்றியமையாமை என்பன . தெய்வப் புணர்ச்சியால் மயங்கியிருந்த தலைமகள் பின்பு தெளிவுபெற்று இவன் யாவனோவெனவும் ; இன்று பிரிகின்றவன் மீண்டும் வருவனோவெனவும் , இன்னும் இவனொடு கூடுதல் வாய்க் குமோவெனவும் பலவாறெண்ணிக் கவல் வாள் . அதைக் குறிப்பாலறிந்த தலைமகன் , உன்னிற் பிரயேன் ; பிரியின் உயிர்தாங்கேன் என்னுங் கருத்துப் படக் கூறித் தேற்றியவாறு , ' உடம்பு ' , ' நட்பு ' என்பன வகுப்பொருமை . பலபிறவிகளில் தொடர்ந்து வந்த உழுவலன்பால் ஏற்பட்ட தொடர்பாதலின் . வாழ்நாள் முழுதுந் தொடரும் என்பதாம் என்னை யென்பது காலிங்கர் பாடம் .
5 சாலமன் பாப்பையா
என் மனைவிக்கும் எனக்கும் இடையே உள்ள உறவு, உடம்பிற்கும் உயிருக்கும் இடையே எத்தகைய உறவோ அத்தகையது.
6 கலைஞர் மு.கருணாநிதி
உயிரும் உடலும் ஒன்றையொன்று பிரிந்து தனித்தனியாக இருப்பதில்லை; அத்தகையதுதான் எமது உறவு.
7 சிவயோகி சிவக்குமார்
உடம்பும் உயிரும் எப்படியோ அப்படியே பருவப் பெண்ணுக்கும் எனக்கும் உள்ள நட்பு.
8 புலியூர்க் கேசிகன்
இம் மடந்தைக்கும் எமக்கும் இடையிலுள்ள நட்பினது நெருக்கம், உடம்போடு உயிருக்கும் இடையேயுள்ள நட்பினது நெருக்கம் போன்றது ஆகும்.
More Kurals from காதற்சிறப்புரைத்தல்
அதிகாரம் 113: Kurals 1121 - 1130
Related Topics
Because you're reading about Excellence of Love