Kural 425

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும் கூம்பலும் இல்ல தறிவு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

ulagam thazheeiya thotpam malardhalum
koompalum illa thaRivu.

🌐 English Translation

English Couplet

Wisdom embraces frank the world, to no caprice exposed;
Unlike the lotus flower, now opened wide, now petals strictly closed.

Explanation

To secure the friendship of the great is true wisdom; it is (also) wisdom to keep (that friendship unchanged, and) not opening and closing (like the lotus flower).

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கி கொள்வது சிறந்த அறிவு, முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாத அறிவு.

2 மணக்குடவர்

ஒருவனுக்கு ஒள்ளிமையாவது உலகத்தோடு பொருந்தினது: அதனை நீர்ப்பூப்போல மலர்தலுங் குவிதலுமின்றி யொருதன்மையாகச் செலுத்துதல் அறிவு. இஃது உயர்ந்தாரோடு நட்புப் பண்ணுதலும் அறிவென்றது.

3 பரிமேலழகர்

உலகம் தழீஇயது ஒட்பம் - உலகத்தை நட்பாக்குவது ஒருவனுக்கு ஒட்பமாம், மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு - அந்நட்பின்கண் முன் மலர்தலும் பின் கூம்புதலும் இன்றி ஒரு நிலையனாவது அறிவாம். ('தழீஇயது', 'இல்லது' என்பன அவ்வத் தொழில்மேல் நின்றன. உலகம் என்பது ஈண்டு உயர்ந்தோரை. அவரோடு கயப்பூப்போல வேறுபடாது கோட்டுப் பூப்போல ஒரு நிலையே நட்பாயினான்,எல்லா இன்பமும் எய்தும் ஆகலின், அதனை அறிவு என்றார்.காரியங்கள் காரணங்களாக உபசரிக்கப்பட்டன.இதனைச் செல்வத்தில் மலர்தலும் நல்குரவில் கூம்பலும்இல்லது என்று உரைப்பாரும் உளர்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

உலகம் தழீஇயது ஒட்பம் -உயர்ந்தோரை நட்பாகத் தழுவிக் கொள்ளுதல் நல்லறிவாம்; மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு -அந்நட்பொழுக்கத்தில் வளர்தலுந்தளர்தலுமின்றி ஒருநிலைப்பட்டு உறுதியாய் நிற்றல் அறிவுடைமையாம். கோட்டுப்பூ, கொடிப்பூ, நிலப்பூ. நீர்ப்பூ என்னும் நால்வகைப் பூக்களுள், நீர்ப்பூ ஒருவேளை மலர்வதும் ஒருவேளைகுவிவதுமாக நிலைமாறுந் தன்மையது. ஏனைமூன்றும் மலர்ந்தபின் மீண்டுங்குவியாது ஒரே நிலையின வாவன. இங்ஙனம் ஒரு நிலைப்பட்டிருப் பதையே 'மலர்தலுங் கூம்பலுமில்லது' என்றார். 'உலகம் ' வரையறைப்பட்ட இடவாகுபெயர். 'தழீஇயது' இன்னிசையளபெடை. இதில் வந்துள்ளது ஒருமருங் குருவகம். மலர்தற்கும் கூம்பற்கும் செல்வ வறுமைகளும் கரணியமாகலாம். "கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி-தோட்ட கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை நயப்பாரும் நட்பாரும் இல்". (நாலடி. 215).

5 திருக்குறளார் வீ. முனிசாமி

உயர்ந்தோர்களை நட்பாக்கிக் கொள்ளுவது ஒருவனுக்கு அறிவுடைமையாகும். உலகத்தினைத் தழுவி நடப்பதும் அதுவேயாகும். அந்நட்பின்கண் முன் மலர்தலும், பின் குவிதலும் இல்லாமல் ஒரே நிலையில் நிற்பது அறிவாகும்.

6 சாலமன் பாப்பையா

உலகை நட்பாக்கிக் கொள்வது அறிவு; நட்பின் ஆரம்பத்தில் பெரிதாக மகிழ்வதும், நாளடைவில் வாடுவதும் இல்லாது. எப்போதும் ஒரே சீராக இருப்பது அறிவு.

7 கலைஞர் மு.கருணாநிதி

உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.

8 சிவயோகி சிவக்குமார்

உலகத்தை ஒட்டிய நட்பு பாரட்டினாலும் மலர்வதும் சுருங்குவதும் இல்லாத்தே அறிவு.

More Kurals from அறிவுடைமை

அதிகாரம் 43: Kurals 421 - 430

Related Topics

Because you're reading about Wisdom & Intelligence

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature