உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும்.
Transliteration
ulakaththaar uNtenpadhu illenpaan vaiyaththu
alakaiyaa vaikkap padum.
🌐 English Translation
English Couplet
Who what the world affirms as false proclaim,
O'er all the earth receive a demon's name.
Explanation
He who denies the existence of what the world believes in will be regarded as a demon on earth.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.
2 மணக்குடவர்
உலகத்தில் அறிவுடையார் பலர் உண்டென்பதாகிய ஒரு பொருளை இல்லையென்று சொல்லுமவன், இவ்வுலகத்தின் கண்ணே திரிவதாகிய பேயென்று எண்ணப்படுவன். இஃது உயர்ந்தோர் உண்டென்பதனை இல்லையென்றல் புல்லறிவென்றது.
3 பரிமேலழகர்
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் -உயர்ந்தோர் பலரும் உண்டு என்பதோர் பொருளைத்தன் புல்லறிவால் இல்லை என்று சொல்லுவான்; வையத்துஅலகையா வைக்கப்படும் - மகன் என்று கருதப்படான்,வையத்துக் காணப்படுவதோர் பேய் என்று கருதப்படும். (கடவுளும், மறுபிறப்பும், இருவினைப் பயனும் முதலாக அவர் உள என்பன பலவேனும், சாதி பற்றி உண்டு என்றும், தானே வேண்டியகூறலால் ஒப்பும், வடிவால் ஒவ்வாமையும் உடைமையின் தன் யாக்கை கரந்து மக்கள் யாக்கையுள் தோன்றுதல்வல்ல 'அலகை' என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும்உறுதிச்சொல் கொள்ளாமையது குற்றம் கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான்- உயர்ந்தோ ரெல்லாரும் உண்டென்று சொல்லும் பொருளை இல்லையென்று மறுக்கும் புல்லறிவாளன் ; வையத்து அலகையா வைக்கப்படும்- மண்ணுலகத்தில் மாந்தன் வடிவில் வாழும் பேயாகக் கருதப்படுவான். உயர்ந்தோர் உண்டென்ப கடவுள், மறுபிறப்பு, இருவினைப் பயன், வீடு , தீயுழி (நரகம்) முதலியன. "ஒன்றறி கிளவி தறட வூர்ந்த குன்றிய லுகரத் திறுதி யாகும்." என்னும் தொல்காப்பிய நூற்பாப்படி (சொல். கிளவி, 8) உண்டு என்பது ஒன்றன்பாற் சொல்லாதலால், 'உண்டென்பது' வகுப்பொருமை. "வேறில்லை யுண்டைம் பால்மூ விடத்தன." என்னும் 13-ஆம் நூற்றாட்டை நன்னூல் நூற்பா(339) பிற்காலத்ததாம். தேவிகம் (சாத்துவிகம்), மாந்திகம் (இராசதம்), பேயிகம் (தாமதம்) என்னும் முவகை மாந்தத் தன்மையுள் முதலிரண்டும் இல்லாதவனை 'அலகை' என்றார்.
5 சாலமன் பாப்பையா
இருக்கிறது என்று உயர்ந்தோர் சொல்லும் ஒரு பொருளை இல்லை என்று மறுக்கும் அறிவற்றவன், இப்பூமியில் காணப்படும் பேயாகக் கருதப்படுவான்.
6 கலைஞர் மு.கருணாநிதி
ஆதாரங்களைக் காட்டி இதுதான் உண்மை என்று தெளிவாகக் கூறப்படுகிற ஒன்றை, வேண்டுமென்றே இல்லை என மறுத்துரைப்பவரைப் பயபேய்களின் பட்டியலின்தான் வைக்க வேண்டும்.
7 சிவயோகி சிவக்குமார்
உயர்ந்தோர் உண்டு என்பதை இல்லை என்பான் இம் மாநிலத்தில் பேயாக ஒதுக்கப்படுவான்.
8 புலியூர்க் கேசிகன்
உலகத்தார் ‘உண்டு’ என்னும் ஒரு பொருளை, தன்னுடைய அறியாமையாலே ‘இல்லை’ என்று சொல்லுபவன், உலகத்தாரால் பேயாகக் கருதி ஒதுக்கி வைக்கப்படுவான்.
More Kurals from புல்லறிவாண்மை
அதிகாரம் 85: Kurals 841 - 850
Related Topics
Because you're reading about Petty Mindedness