திருக்குறள் - 598     அதிகாரம்: 
| Adhikaram: ookkamutaimai

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு.

குறள் 598 - திருவள்ளுவர் - ThiruValluvar

"ullam ilaadhavar eydhaar ulakaththu" Thirukkural 598 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஊக்கம் இல்லாதவர் இவ்வுலகில் யாம் வண்மை உடையேம் என்றுத் தம்மைத் தான் எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடையமாடடார்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


உள்ளமிகுதியில்லாதார் உலகின்கண் வண்மையுடைமை யென்னுங் களிப்பினைப் பெறார். இஃது உள்ளமிகுதி யில்லாதார்க்குப் பொருள்வரவு இல்லையாம் ஆதலான் அவர் பிறர்க்கு ஈயமாட்டாரென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


உள்ளம் இல்லாதவர் - ஊக்கம் இல்லாத அரசர்; உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு எய்தார் - இவ்வுலகத்தாருள் வண்மையுடையேம் என்று தம்மைத்தாம் மதித்தலைப் பெறார். (ஊக்கம் இல்லையாகவே முயற்சி, பொருள், கொடை, செருக்கு இவை முறையே இலவாம் ஆகலின், 'செருக்கு எய்தார்' என்றார். கொடை, வென்றியினாய இன்பம் தமக்கல்லாது பிறர்க்குப் புலனாகாமையின் தன்மையால் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


உள்ளம் இலாதவர்-ஊக்கமில்லாத அரசரும் பெருஞ்செல்வரும்; உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு எய்தார் -இவ்வுலகத்தில் யாமே வண்மையுடையேம் என்று மகிழ்வொடு கருதும் பெருமிதம் பெறார். ஊக்கமில்லாதவர்க்கு அதனாலுண்டாகும் முயற்சியும், முயற்சியாலுண்டாகும் பொருளும் ,பொருளாலுண்டாகும் கொடையும் , கொடையாலுண்டாகும் செருக்கும் இல்லையாதலின் , வள்ளிய தீயதுமான இருவகைச் செருக்குள் ,இங்குக் குறித்தது நல்லது என அறிக. "கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே". என்பது தொல்காப்பியம் (மெய்ப்பாட்டியல், 6).

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


ஊக்கம் இல்லாதவர்கள் இவ்வுலகத்தாருள் யாம் வண்மையுடையேம் என்று தம்மைத் தாமே மதிக்கும் பெருமையினைப் பெறமாட்டார்கள்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


ஊக்கம் இல்லாதவர் பிறர்க்கு உதவும் வள்ளல் யாம் என்னும் மன உயர்வைப் பெறமாட்டார்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப் பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஊக்கம் கொண்ட உள்ளம் இல்லாதவர் உலகத்தை வென்றோம் என்ற பெருமை அடையமுடியாது.

Thirukkural in English - English Couplet:


The soulless man can never gain
Th' ennobling sense of power with men.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Those who have no (greatness of) mind, will not acquire the joy of saying in the world, "we have excercised liaberality".

ThiruKural Transliteration:


uLLam ilaadhavar eydhaar ulakaththu
vaLLiyam ennunhj serukku.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore