"ullam udaimai udaimai poruludaimai" Thirukkural 592 - Meaning in English & Tamil Vilakkam
- மு.வரதராசனார் உரை: Kural Vilakkam
- மணக்குடவர் உரை: Kural Vilakkam
- பரிமேலழகர் உரை: Kural Vilakkam
- ஞா.தேவநேயப் பாவாணர் உரை: Kural Vilakkam
- திருக்குறளார் வீ. முனிசாமி உரை: Kural Vilakkam
- சாலமன் பாப்பையா உரை: Kural Vilakkam
- கலைஞர் மு.கருணாநிதி உரை: Kural Vilakkam
- சிவயோகி சிவக்குமார் உரை: Kural Vilakkam
- Thirukkural in English - English Couplet
மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil
ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும், மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும்.
மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil
உடைமையாவது ஊக்கமுடைமை; பொருளுடைமை நிலை நில்லாது நீங்கும். பொருள் உடையார்க்கு எல்லா முண்டாம் என்பார்க்கு இது கூறப்பட்டது.
பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil
உள்ளம் உடைமை உடைமை - ஊக்கம் உடைமையே ஒருவனுக்கு நிலைநின்ற உடைமையாவது; பொருள் உடைமை நில்லாது நீங்கிவிடும் - மற்றைப் பொருள் உடைமை நிலைநில்லாது நீங்கிப்போம். ('உள்ளம்' ஆகுபெயர். ஊக்கம் உள்ளத்துப் பண்பாகலின், அதற்கு நிலை நிற்றலும், பொருள் உடம்பினும் வேறாய் அழிதல் மாலைத்து ஆகலின், அதற்கு நிலை நில்லாமையும் கூறினார். கூறவே, அஃது உடைமையன்று என்பது பெறப்பட்டது.).
ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil
உள்ளம் உடைமை உடைமை - முயற்சியுள்ள முடைமையே ஒருவனுக்கு நிலையான உடைமையாவது ; பொருள் உடைமை நில்லாது நீங்கிவிடும் - மற்றப் பொருளுடைமை எவ்வளவு பெரிதேனும் தன்னிடம் நில்லாது நீங்கிவிடும். ஊக்கத்தினாற் புதுச்செல்வம் உண்டாக்கப்படுவதுடன் பழஞ்செல்வமும் பாதுகாக்கப்படும். 'குந்தித் தின்றாற் குன்றுங் குன்றும்' . ஊக்கம் உள்ளப்பண்பாதலின் அதை ஒருவரும் கவரமுடியாது . செல்வம் இயற்கையினாலும் செயற்கையினாலும் பல்வேறு வகையில் அழிந்துபோம் . ஆதலால் உண்மையான வுடைமை ஊக்கமே என்பதாம் . 'உள்ளம்' ஆகுபெயர் அன்று. அது ஊக்கம் என்பதன் ஒருபொருள் மறுசொல் . உள் - உய் - உயல் - உயற்று - உஞற்று = முயற்சி . ஒ. நோ : முயல் - முயற்று. உள்ளுதல் முன்தள்ளுதல். உள் - உள்ளம். மனத்தைக் குறிக்கும் உள்ளம் என்னும் சொல் உள்ளிருப்பது என்று பொருள்படுதலால் அது வேறாம்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil
ஊக்கம் உடையவராக இருப்பதே ஒருவர்க்கு நிலையான உடைமையாகும். மற்றபடி பொருள் உடைமை யென்பது நிலையாக நில்லாமல் நீங்கிவிடும்.
சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil
மன ஊறுதியே நிலையான உடைமை; செல்வம் உடைமையோ நிலைத்திராமல் நீங்கிவிடும்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil
ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.
சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil
உள்ளத்தில் உரிமையாக அடைந்ததே உரிமையானது. பொருளை அடைந்தது நிலை இல்லாமல் விலகிவிடும்.
Thirukkural in English - English Couplet:
The wealth of mind man owns a real worth imparts,
Material wealth man owns endures not, utterly departs.
ThirukKural English Meaning - Couplet -Translation:
The possession of (energy of) mind is true property; the possession of wealth passes away and abides not.
ThiruKural Transliteration:
uLLam udaimai udaimai poruLudaimai
nillaadhu neengi vidum.