திருக்குறள் - 1316     அதிகாரம்: 
| Adhikaram: pulavi nunukkam

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.

குறள் 1316 - திருவள்ளுவர் - ThiruValluvar

"ullinaen endraen mat ren marandheer endrennaip" Thirukkural 1316 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


நினைத்தேன் என்று கூறி‌னேன்; நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர் என்று என்னைத் தழுவாமல் ஊடினாள்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அவ்விடத்து எம்மை நினைத்தோமென்றீர்: மறந்தாரன்றே நினைப்பார். ஆதலான் எங்களை மறந்தீரென்று சொல்லி எம்மை முயங்காளாய்ப் புலவிக்குத் தகுதியாளாயினாள். இது நினைத்தோமெனினும் குற்றமென்று கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) உள்ளினேன் என்றேன் - பிரிந்த காலத்து நின்னையிடையின்றி நினைந்தேன் என்னும் கருத்தால், யான் உள்ளினேன் என்றேன்; மற்று என் மறந்தீர் என்று என்னைப் புல்லாள் புலத்தக்கனள் - என, அதனை ஒருகால் மறந்து பின் நினைந்தேன் என்றதாகக் கருதி, என்னை யிடையே மறந்தீர் என்று சொல்லி, முன் புல்லுதற்கு அமைந்தவள் அஃதொழிந்து புலத்தற்கு அமைந்தாள். (மற்று - வினை மாற்றின்கண் வந்தது. அருத்தாபத்திவகையான் மறத்தலையுட்கொண்டு புலந்தாள் என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவுமது) உள்ளினேன் என்றேன் - பிரிந்து போயிருந்த காலத்தில் உன்னை ஒருபோதும் மறவாது நினைத்திருந்தேன் என்னுங் கருத்தில், உள்ளினேன் என்றேன், மற்று என் மறந்தீர் என்று என்னைப் புல்லாள் புலத்தக்கனள் - உடனே அதை ஒருகால் மறந்திருந்து பின்பு நினைத்துக்கொண்டேன் என்று நான் கூறியதாகக் கருதி, என்னையிடையேமறந்துவிட்டீரென்று சொல்லி, அதற்கு முன்பு என்னைத் தழுவுதற்கிருந்தவள் அதைச் செய்யாது அன்றே புலவியை மேற்கொண்டுவிட்டாள். எதிர்நிலை யளவை வகையால் உள்ளுதலுக்கு மறுதலையான மறத்தலையும் உட்கொண்டு புலந்தாள் என்பதாம். ' மற்று ' வினைமாற்றின்கண் வந்தது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


எப்போதும் உன்னைத்தான் எண்ணினேன் என்றேன். சில சமயம் மறந்து ஒரு சமயம் நினைத்ததாக எண்ணி அப்படியானால் என்னை இடையில் மறந்திருக்கிறீர் என்று சொல்லித் தழுவத் தொடங்கியவள், விட்டுவிட்டு ஊடத் தொடங்கினாள்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


உன்னை நினைத்தேன் என்று காதலியிடம் சொன்னதுதான் தாமதம்; அப்படியானால் நீர் என்னை மறந்திருந்தால்தானே நினைத்திருக்க முடியும்? எனக்கேட்டு ஏன் மறந்தீர்? என்று அவள் ஊடல் கொண்டாள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நினைத்தேன் என்றேன் அப்படி என்றால் மற்றபடி மறந்திருந்தீர்கள் என்று என்னை விலகினாள் நெருங்கி இருந்தவள்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


‘நின்னை நினைத்தேன்’ என்றேன்; ‘நினைத்தது உண்டாயின் மறந்திருந்தும் உண்டல்லவோ! என்னை ஏன் மறந்தீர்?’ என்று சொல்லி, அவள் தழுவாமல் பிணங்கினாள்.

Thirukkural in English - English Couplet:


'Each day I called to mind your charms,' 'O, then, you had forgot,'
She cried, and then her opened arms, Forthwith embraced me not.

ThirukKural English Meaning - Couplet -Translation:


When I said I had remembered her, she said I had forgotten her and relaxing her embrace, began to feign dislike.

ThiruKural Transliteration:


ullinaen endraen-mat ren-marandheer endrennaip
pullaal pulaththak kanal.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore