உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது.
Transliteration
ullinum theeraap perumakizh seydhalaal
kallinum kaamam inidhu.
🌐 English Translation
English Couplet
From thought of her unfailing gladness springs,
Sweeter than palm-rice wine the joy love brings.
Explanation
Sexuality is sweeter than liquor, because when remembered, it creates a most rapturous delight
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் ( உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் ) கள்ளை விட காமம் இன்பமானதாகும்.
2 மணக்குடவர்
தம்மாற் காதலிக்கப்பட்டவரை நினைத்தாலும் அது நீங்காத பெருங்களிப்பைத் தரும்: ஆதலால் கள்ளினும் காமம் இனிது.
3 பரிமேலழகர்
[அஃதாவது , முன் கூடிய ஞான்றே இன்பத்தினை நினைந்து தலைமகள் தனிமை எய்தலும், பாசறைக்கண் தலைமகன் தனிமை எய்தலுமாம் . இவ்வாறு இருவர்க்கும் பொதுவாதல் பற்றிப் பன்மைப்பாலாற் கூறப்பட்டது. இது படர் மிகுதி தன்கண்ணதாக நினைந்த தலைமகட்கும் உரித்தாகலின் அவ்வியைபுபற்றித் தனிப்படர் மிகுதியின்பின் வைக்கப்பட்டது.] (தூதாய்ச் சென்ற பாங்கனுக்குத் தலைமகன் சொல்லியது.) உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்- முன் கூடிய ஞான்றை இன்பத்தினைப் பிரிந்துழி நினைத்தாலும் அதுபொழுது பெற்றாற்போல நீங்காத மிக்க மகிழ்ச்சியைத் தருதலால்; கள்ளினும் காமம் இனிது - உண்டுழியல்லது மகிழ்ச்சி செய்யாத கள்ளினும் காமம் இன்பம் பயத்தல் உடைத்து. (தன் தனிமையும், தலைமகளை மறவாமையும் கூறியவாறு).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
(தூதாய்ச் சென்ற பாங்கனுக்குத் தலைமகன் சொல்லியது.) (இ-ரை.) உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்-முன்பு கூடி நுகர்ந்த இன்பத்தைப் பின்பு பிரிந்தவிடத்து நினைத்தாலும் அன்றே பெற்றாற்போல நீங்காத பெருமகிழ்ச்சியைத்தருதலால்; கள்ளினும் காமம் இனிது-உண்ட விடத்தல்லது மகிழ்ச்சி செய்யாத கள்ளினுங் காமம் இன்பந்தருவதாயுள்ளது தலைமகளை மறவாமை கூறியவாறு. முன்பு கண்டார் மகிழ் செய்யும் (குறள்-1090) என்ற காமம் இங்குக் கருதினாலும் காமம் இங்குக் கருதினாலும் மகிழ் செய்யும் என்று கூறப்பட்டது.
5 சாலமன் பாப்பையா
முன்பு என் மனைவியுடன் கூடி அனுபவித்த இன்பத்தைப் பிரிந்திருக்கும் போது நினைத்தாலும் அது நீங்காத பெரு மகிழ்ச்சியைத் தருவதால் குடித்தால் மட்டுமே மகிழ்ச்சி தரும் கள்ளைக் காட்டிலும் காதல் இன்பமானது.
6 கலைஞர் மு.கருணாநிதி
உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளைவிட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும்.
7 சிவயோகி சிவக்குமார்
நினைத்தாலே அளவற்ற பெருமகிழ்வை உண்டாக்குவதால் மதுவை காட்டிலும் காமம் இனிது.
8 புலியூர்க் கேசிகன்
நினைத்தாலும் தீராத பெருமகிழ்ச்சியை எமக்குச் செய்வதனால், உண்டால் மட்டுமே மகிழ்ச்சி தரும் கள்ளினும் காமமே உலகத்தில் இனிமை தருவதாகும்.
More Kurals from நினைந்தவர்புலம்பல்
அதிகாரம் 121: Kurals 1201 - 1210
Related Topics
Because you're reading about Lamenting the Beloved