உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின்.
Transliteration
uLLiyadhu eydhal eLidhuman matrundhaan
uLLiyadhu uLLap peRin.
🌐 English Translation
English Couplet
'Tis easy what thou hast in mind to gain,
If what thou hast in mind thy mind retain.
Explanation
It is easy for (one) to obtain whatever he may think of, if he can again think of it.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும்.
2 மணக்குடவர்
தான் நினைந்த பொருளைப் பெறுதல் எளிது; பின்பும் அதனை மறவாதே நினைக்கக் கூடுமாயின். இனிப் பொருளின்கண் மறவாமை கூறுவார் முற்பட நினைத்ததனை மறவாமை வேண்டுமென்றார்.
3 பரிமேலழகர்
தான் உள்ளியது எய்தல் எளிது மன் - அரசனுக்குத் தான் எய்த நினைத்த பொருளை அந்நினைத்த பெற்றியே எய்துதல் எளிதாம், மற்றும் உள்ளியது உள்ளப் பெறின் - பின்னும் அதனையே நினைக்கக் கூடுமாயின். (அது கூடாதென்பது ஒழிந்து நின்றமையின், 'மன்' ஒழி இசைக்கண் வந்தது. அதனையே நினைத்தலாவது: மறவி இன்றி அதன்கண்ணே முயறல். இவை இரண்டு பாட்டானும் பொச்சாவாமைக்கு உபாயம் கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
மன் தான் உள்ளியது எய்தல் எளிது - அரசன் தான் கருதிய பொருளைத் தான் கருதியவாறே பெறுதல் எளிதாம் ; உள்ளியது மற்றும் உள்ளப் பெறின் - தான் எண்ணியதைப் பின்னும் விடாது எண்ணக் கூடுமாயின். உள்ளியதை யுள்ளுதலாவது தான் கருதியதைப் பெறும் வரை மறவாது அது பற்றி முயற்சி செய்தல் . 'மற்று' பின்மைப் பொருளில் வந்தது . 'மன்' என்பதை இடைச் சொல்லாகக் கொண்டு , அது கூடாதென்பது ஒழிந்து நின்றமையின் , 'மன்' ஒழியிசைக் கண் வந்தது ,என்னும் பரிமேலழகர் இலக்கணக் குறிப்பு இவ்விடத்திற்கு ஏற்காமை யுணர்க.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
தான் அடைய நினைத்த பொருள்கள் அனைத்தையும் ஒருவன் அடைதல் எளிதாக முடியும். எப்போது என்றால், பின்னும் தான் அதனையே நினைத்திருப்பானேயானால், என்பதாம்.
6 சாலமன் பாப்பையா
நினைத்ததைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்க முடியுமானால் நினைத்ததை நினைத்தபடியே அடைவது எளிது.
7 கலைஞர் மு.கருணாநிதி
கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து அதில் வெற்றி காண்பதிலேயே நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது எளிதானதாகும்.
8 சிவயோகி சிவக்குமார்
எண்ணியதை அடைவது எளிது அதற்க்கு நாம் எண்ணியதை எண்ணியபடியே இருக்கச் செய்யவேண்டும்.
More Kurals from பொச்சாவாமை
அதிகாரம் 54: Kurals 531 - 540