திருக்குறள் - 927     அதிகாரம்: 
| Adhikaram: kallunnaamai

உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்.

குறள் 927 - திருவள்ளுவர் - ThiruValluvar

"ullotri ulloor nakappatuvar egngnaandrum" Thirukkural 927 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


கள்ளை மறைந்திருந்து குடித்து அறிவு மயங்குபவர், உள்ளூரில் வாழ்கின்றவரால் உள்ளான செய்திகள் ஆராயப்பட்டு எந்நாளும் சிரிக்கப்படும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தங்கள் ஒழுக்கத்தை உள்புக்கு அறிந்த உள்ளூராலே இகழப்படுவர்; எல்லாநாளும் கள்ளுள்ளவிடத்தை நாடி, அதன்கண்ணே தாழ்வார்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


கள் ஒற்றிக் கண் சாய்பவர் - கள்ளை மறைந்துண்டு அக்களிப்பால் தம் அறிவு தளர்வார்; உள்ளூர் உள் ஒற்றி எஞ்ஞான்றும் நகப்படுவர் - உள்ளூர் வாழ்பவரான் உள் நிகழ்கின்றது உய்த்துணர்ந்து எஞ்ஞான்றும் நகுதல் செய்யப்படுவர். (உள்ளூர் - ஆகுபெயர், 'உண்டு' என்பது அவாய் நிலையான் வந்தது. உய்த்துணர்தல் - தளர்ச்சியால் களிப்பினை உணர்ந்து அதனால் கள்ளுண்டது உணர்தல்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


கள் ஒற்றிக் கண்சாய்பவர் - கள்ளை மறைந்துண்டு அதனால் வெறியேறி அறிவு தளர்பவர்; உள் ஊர் உள் ஒற்றி எஞ்ஞான்றும் நகப்படுவர் - உள்ளூராரால் உள்ளத்திலுள்ள மறைபொருள்கள் உய்த்துணரப்பட்டு எப்போதும் நகையாடப்படுவர். கள்வெறியினால் உணர் விழந்தவர் பொருள் விளங்காத தொடர்களை மட்டுமன்றி, நனவுக் காலத்தில் தம் உள்ளத்தில் மறைத்துவைத்திருந்தனவும் தமக்கு மாறானவும் தம்மைத் தாழ்த்து வனவுமான செய்திகளையும் வெளிவிடுவராதலின் , உள்ளொற்றியுள்ளூர் நகப்படுவர் என்றார். கள்ளைக்குடித்தால் உள்ளதைச்சொல்வான் . 'கள்ளைக்கொடுத்துக் கருமத்தை (காரியத்தை) அறி'. என்பன பழமொழிகள் .'உள்ளூர்' 'இலக்கணப்போலி'. 'ஊர்' 'கண்' ஆகுபெயர்கள். உண்டு என்பது அவாய்நிலையான் வந்தது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


போதைப் பொருளை மறைந்திருந்து பயன்படுத்தி மயங்குபவரை ஊருக்குள் வாழ்பவர் அறிந்து எப்போதும் இகழ்ந்து சிரிப்பர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


மறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களது கண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


அழிவைத் தருவதை தனக்கென எடுத்துக் கொள்பவரை உடன் இருக்கும் உள்ளூர் நபர்கள் எள்ளி நகைப்பர் என்பதைப் போன்றே கள்ளுண்டு கண் மயங்குபவருக்கும் ஏற்படும்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


கள்ளை மறைவாக உண்டு, அதன் களிப்பினாலே தம் அறிவை இழந்தவர்கள், உள்ளூரில் வாழ்பவரால், அவர் மறைவை அறிந்து எள்ளி நகையாடப் படுவர்.

Thirukkural in English - English Couplet:


Who turn aside to drink, and droop their heavy eye,
Shall be their townsmen's jest, when they the fault espy.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Those who always intoxicate themselves by a private (indulgence in) drink; will have their secrets detected and laughed at by their fellow-townsmen.

ThiruKural Transliteration:


uLLotri uLLoor nakappatuvar eGnGnaandrum
kaLLotrik kaNsaai pavar.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore