உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.
Transliteration
uLLuvan manyaan maRappin maRappaRiyaen
oLLamark kaNNaal kuNam.
🌐 English Translation
English Couplet
I might recall, if I could once forget; but from my heart
Her charms fade not, whose eyes gleam like the warrior's dart.
Explanation
If I had forgotten her who has bright battling eyes, I would have remembered (thee); but I never forget her. (Thus says he to her maid).
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
போர் செய்யும் பண்புகளை உடைய இவளுடைய பண்புகளை யான் மறந்தால் பிறகு நினைக்க முடியும் ஆனால் ஒரு போதும் மறந்ததில்லையே!.
2 மணக்குடவர்
மறந்தேனாயின் நினைப்பேன் யான்: மறத்தலறியேன்: ஒள்ளமர்க் கண்ணாள் குணத்தினை. தோழியிற் கூடிநீங்குத் தலைமகனை நோக்கி எங்களை நினைக்கிலீரோ? என்ற தோழிக்குத் தலைமகன் கூறியது. இவை ஐந்தும் தலைமகன் கூற்று. இனிக் கூறும் ஐந்துந் தலைமகள் கூற்று.
3 பரிமேலழகர்
(ஒருவழித் தணந்துவந்த தலைமகன், நீயிர் தணந்த ஞான்று எம்மை உள்ளியும் அறிதீரோ? என்ற தோழிக்குச் சொல்லியது.) ஒள் அமர்க்கண்ணாள் குணம், யான் மறப்பின் உள்ளுவன் - ஒள்ளியவாய் அமரைச் செய்யும் கண்ணினையுடையாள் குணங்களை யான் மறந்தேனாயின், நினைப்பேன்; மறப்பு அறியேன் - ஒரு பொழுதும் மறத்தலையறியேன், ஆகலான் நினைத்தலையும் அறியேன். (மன் : ஒழியிசைக்கண் வந்தது. குணங்கள்: நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு முதலாயின. இத்துணையும் தலைமகன் கூற்று, மேல் தலைமகள் கூற்று.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
( ஒருவழிந் தணந்துவந்த தலைமகன் , நீயிர் தணந்த ஞான்று எம்மை நினைத்தீரோ என்ற தோழிக்குச் சொல்லியது .) ஒள் அமர்க் கண்ணாள் குணம் யான் மறப்பின் உள்ளுவன் - ஒளிபொருந்தியவாய் செய்யுங் கண்ணையுடையாளின் குணங்களை யான் என்றேனும் மறந்தேனாயின்நினைத்திருப்பேன் ; மறப்பு அறியேன் - ஆயின் , யான் ஒருபோதும் மறந்ததில்லை ஆதலால் நினைத்ததுமில்லை . குணங்கள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு , அன்பு , கற்பு என்பன . ' மன் ' ஒழியிசைக்கண் வந்தது . இதுவரையுந் தலைமகன் கூற்று ; இனிவருவன தலைமகள் கூற்று . ஒருவழித் தணத்தலாவது , இரவுக்குறிக் காலத்திறுதியில் அலரெழுந்தபின் அது அடங்கும்வரை தலைமகன் சிலநாள் தன் ஊரின்கண் தங்கியிருத்தல் .
5 சாலமன் பாப்பையா
ஒளியுடன் கூடிய கண்களை உடைய என் மனைவியின் குணங்களை நான் மறந்தால் அல்லவா அவளை நினைப்பதற்கு? மறப்பதும் இல்லை. அதனால் நினைப்பதும் இல்லை.
6 கலைஞர் மு.கருணாநிதி
ஒளி கொண்டிருக்கும் விழிகளையுடைய காதலியின் பண்புகளை நினைப்பதேயில்லை; காரணம் அவற்றை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு.
7 சிவயோகி சிவக்குமார்
நினைப்பதில்லை நான் காரணம் மறப்பதை மறந்தும் அறியவில்லை ஒளி பொருந்திய கண்ணாள் குணத்தை.
8 புலியூர்க் கேசிகன்
ஒள்ளியவாய் அமர்ந்த கண்களை உடையவளின் குணங்களை மறப்பதற்கே அறியேன்; அதனால், யான் அதை எப்போதாயினும் நினைப்பதும் செய்வேனோ!
More Kurals from காதற்சிறப்புரைத்தல்
அதிகாரம் 113: Kurals 1121 - 1130
Related Topics
Because you're reading about Excellence of Love