திருக்குறள் - 1184     அதிகாரம்: 
| Adhikaram: pasapparuparuvaral

உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.

குறள் 1184 - திருவள்ளுவர் - ThiruValluvar

"ulluvan manyaan uraippadhu avardhiramaal" Thirukkural 1184 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


யான் அவருடைய நல்லியல்புகளை நினைக்கின்றேன்; யான் உரைப்பதும் அவற்றையே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ?.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


யான் எக்காலமும் நினைப்பேன், சொல்லுவதும் அவர் திறமே, இத்தன்மையேனாகவும் பசலை வஞ்சனையாகப் பரவா நின்றது. இதற்கு நிலை யான் அறிகிலேன். இஃது ஆற்றாமை மிகாநின்றதென்று கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


('பிரிகின்றவர் தெளிவித்த சொற்களையும் அவர் நல்திறங்களையும் அறிதியாகலின் நீட்டியாது வருவர்', என்ற வழிச் சொல்லியது.) யான் உள்ளுவன் - அவர் சொற்களை யான் மனத்தால் நினையா நிற்பேன்; உரைப்பது அவர் திறம் - வாக்கால் உரைப்பதும் அவர் நல்திறங்களையே; பசப்புக் கள்ளம் - அங்ஙனம் செய்யாநிற்கவும், பசப்பு வந்து நின்றது, இது வஞ்சனையாயிருந்தது. (பிறவும், ஓவும் அசைநிலை. மெய் மற்றை மனவாக்குகளின் வழித்தாகலின், அதன் கண்ணும் வரற்பாற்றன்றாயிருக்க வந்தமையின், இதன் செயல் கள்ளமாயிருந்தது எனத் தான் ஆற்றுகின்றமை கூறியவாறாயிற்று.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(காதலர் தெளிவித்த சொற்களையும் அவர் நற்றிறங்களையும் அறிதியாதலின் அவர் வரும்வரை ஆற்றியிரு என்ற தோழிக்குச் சொல்லியது.) . யான் மன் உள்ளுவன்- காதலர் சொற்களை யான் மிகுதியும் நினைப்பேன்; உரைப்பது அவர் திறம்-யாரிடத்திலும் சொல்லுவதும் அவர் நற்றிறங்களையே; பசப்புக் கள்ளம்-அங்ஙனமிருந்தும் எப்படியோ இப்பசலை கள்ளத்தனமாக வந்துள்ளது. முக்கரணங்களுள் மெய் ஏனையிரண்டின் வழிப்பட்டதாகலின், நினைவு சொல் வழியாக வராது நேரே மெய்வழியாக வந்தது மாயமாயுள்ளது என்பதாம்.'ஆல்,' 'பிற,' 'ஓ' அசைநிலைகள்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நான் நினைப்பதெல்லாம் அவரைத்தான். சொல்வது எல்லாம் அவர் குணங்களைத்தாம்; இருந்தும் இந்தப் பசலை வந்துவிட்டதே; இது வஞ்சகம் அல்லவா?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


யான் நினைப்பதும், உரைப்பதும் அவரது நேர்மைத் திறன் பற்றியதாகவே இருக்கும்போது, என்னையறியாமலோ வேறு வழியிலோ இப்பசலை நிறம் வந்தது எப்படி?.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நினைத்துக் கொண்டே இருக்கிறேன் மற்றபடி அவரது திறத்தை உரைத்துக் கொண்டு இருக்கிறேன் இருப்பினும் கள்ளத்தனமாகவோ பிற வழியிலோ பசலையும் வந்தது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


அவரையே யான் நினைத்திருப்பேன்; அவர் திறங்களைப் பற்றியே பேசுவேன்; அவ்வாறாகவும், பசலையும் வந்து படர்ந்ததுதான் பெரிய வஞ்சனையாய் இருக்கின்றது!

Thirukkural in English - English Couplet:


I meditate his words, his worth is theme of all I say,
This sickly hue is false that would my trust betray.

ThirukKural English Meaning - Couplet -Translation:


I think (of him); and what I speak about is but his excellence; still is there sallowness; and this is deceitful.

ThiruKural Transliteration:


ulluvan manyaan uraippadhu avardhiramaal
kallam piravo pasappu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore