Kural 339

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

uRangu vadhupoalunhj saakkaatu uRangi
vizhippadhu poalum piRappu.

🌐 English Translation

English Couplet

Death is sinking into slumbers deep;
Birth again is waking out of sleep.

Explanation

Death is like sleep; birth is like awaking from it.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.

2 மணக்குடவர்

உறங்குவதனோடு ஒக்கும் சாக்காடு: உறங்கி விழிப்பதனோடு ஒக்கும் பிறப்பு. இது போன உயிர் மீண்டும் பிறக்கு மென்பதூஉம், இறத்தலும் பிறத்தலும் உறங்குதலும் விழித்தலும் போல மாறிவருமென்பதூஉம் கூறிற்று.

3 பரிமேலழகர்

சாக்காடு உறங்குவது போலும் - ஒருவனுக்குச் சாக்காடு வருதல் உறக்கம் வருதலோடு ஒக்கும், பிறப்பு உறங்கி விழிப்பது போலும் - அதன்பின் பிறப்பு வருதல் உறங்கி விழித்தல் வருதலோடு ஒக்கும். (உறங்குதலும் விழித்தலும் உயிர்கட்கு இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வருகின்றாற் போலச் சாக்காடும் பிறப்பும் இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வரும் என்பது கருத்து. நிலையாமையே நிலைபெற்றவாறு அறிவித்தற்குப் பிறப்பும் உடன் கூறப்பட்டது.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

சாக்காடு உறங்குவது போலும் -ஒருவனுக்குச் சாவு வருதல் உறக்கம் வருதலை யொக்கும்; பிறப்பு உறங்கி விழிப்பது போலும் - அதன்பின் அவன் மீண்டும் பிறத்தல் உறங்கினவன் திரும்ப விழிப்பதை யொக்கும். உயிர்கட்கு ஒரு தனித்த பிறவியில் உறக்கமும் விழிப்பும் மாறி மாறி வருவது போன்றே, தொடக்கமிலியாகவரும் பொது நிலைமையில் இறப்பும் பிறப்பும் மாறி மாறி வருவதும் இயல்பாம் என்பது கருத்து. ஆகவே வீடுபெறாத நிலையில், ஒரு பிறவியால் மட்டு மன்றிப் பலபிறவியாலும் நிலையாமை தோன்றி நிலைப்பதாம்.

5 திருக்குறளார் வீ. முனிசாமி

ஒருவனுக்குச் சாக்காடு வருவது, உறக்கம் வருவதற்கு ஒப்பாகும். அதன்பின் பிறப்பு வருதல், உறங்கியபின் விழித்தல் வருதலோடு ஒப்பாகும்.

6 சாலமன் பாப்பையா

உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு.

7 கலைஞர் மு.கருணாநிதி

நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு.

8 சிவயோகி சிவக்குமார்

தூங்கிவிடுவதுப் போன்றது மரணம் தூங்கிப் பின்பு விழிப்பதுப் போன்றது பிறப்பு.

More Kurals from நிலையாமை

அதிகாரம் 34: Kurals 331 - 340

Related Topics

Because you're reading about Impermanence

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature