Kural 778

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும் சீர்குன்றல் இலர்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

uRinuyir anjaa maRavar iRaivan
seRinum seerkundral ilar.

🌐 English Translation

English Couplet

Fearless they rush where'er 'the tide of battle rolls';
The king's reproof damps not the ardour of their eager souls.

Explanation

The heroes who are not afraid of losing their life in a contest will not cool their ardour, even if the king prohibits (their fighting).

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

7 scholars' interpretations

1 மு.வரதராசனார்

போர்வந்தால் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவர்.

2 மணக்குடவர்

ஒன்று உற்ற காலத்து உயிர்ப்பொருட்டு அஞ்சாத மறவர் தம்மரசனால் செறுக்கப்பட்டாராயினும் தமது முதன்மை குன்றுதல் இலர். இஃது அஞ்சாமையுடையார் வீரியஞ் செய்யுமிடத்துக் குறைய நில்லாமை வேண்டுமென்றது.

3 பரிமேலழகர்

உறின் உயிர் அஞ்சா மறவர் - போர்பெறின் தம்முயிர்ப் பொருட்டு அஞ்சாது அதன்மேற் செல்லும் வீரர்; இறைவன் செறினும் சீர்குன்றல் இலர் - தம் இறைவன் அது வேண்டா என்று முனியினும் அவ் வீரமிகுதி குன்றார். (போர் பெற்று அறியாமையின், அது பெற்றால் அரசன் தடுப்பினும் நில்லார் என்பதாம். பிறரும் 'போரெனிற்புகலும் புனைகழல் மறவர்'(புறநா.31) என்றும்,'புட்பகைக்கு ஏவானாகலின் சாவேம் யாம் என நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப'(புறநா.68) என்றும் கூறினார்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

உறின் உயிர் அஞ்சா மறவர்-போர்வரின் இறப்பிற்கஞ்சாது மகிழ்ந்து போர்க்களத்திற்குச் செல்லும் மறவர்; இறைவன் செறினும் சீர்குன்றல் இலர்-தம் அரசன் அதுவேண்டாமென்று தடுப்பினும் தம் மறந்தளர்தல் இல்லை. நாள்தொறும் வருந்தியுழைக்கும் உழைப்பாளிகள் வேலைசெய்யாது சோம்பியிருத்தலை வெறுத்தல் போல, போருக்கேற்ற மறமும் உடல் திறமும் பயிற்சியும் பெற்ற மறவர் போரின்றியிருத்தலை வெறுத்தல் இயல்பே. இதை. "போரெனின் புகலும் புனைகழன் மறவர் காடிடைக் கிடந்த நாடுநனி சேய செல்வே மல்லே மென்னார்" (புறம். 31) "உட்பகை யொருதிறம் பட்டெனப் புட்பகைக் கேவா னாகலிற் சாவேம் யாமென நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப" (ஷெ 68) "மண்டமர் நசையொடு கண்படை பெறாஅது" (முல்லை: 67) என்பவற்றால் அறிக.

5 சாலமன் பாப்பையா

போர் வந்தால் தம் உயிர்க்கு அஞ்சாது செல்லும் வீரர், அப்போரை வேண்டா என்று அரசு சினந்து தடுத்தாலும், தம் வீரத்தில் குறைய மாட்டார்.

6 கலைஞர் மு.கருணாநிதி

தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமை ஆற்றுபவர்கள்தான், போர்களத்தில் உயிரைப் பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர்.

7 சிவயோகி சிவக்குமார்

தேவை என்றால் உயிருக்கு அஞ்சாத மறவர் தன் அரசன் தடுத்தாலும் சீர் குறைவது இல்லை.

More Kurals from படைச்செருக்கு

அதிகாரம் 78: Kurals 771 - 780

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature